சபரிமலையில் ரோப் கார் திட்டத்திற்கு வனவிலங்கு வாரியம் அனுமதி

பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு பொருட்கள் கொண்டு செல்ல ரோப் கார் அமைக்க தீர்மானிக்கப்பட்டது.
சபரிமலையில் ரோப் கார் திட்டத்திற்கு வனவிலங்கு வாரியம் அனுமதி
Published on

திருவனந்தபுரம்,

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தேவையான பொருட்கள் தற்போது பம்பையில் இருந்து டிராக்டர்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இது சுற்றுச்சூழலுக்கும், பக்தர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதால் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு பொருட்கள் கொண்டு செல்ல ரோப் கார் அமைக்க தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, பம்பை ஹில்டாப் பகுதியில் இருந்து சன்னிதானம் வரை 2.7 கிமீ தொலைவுக்கு இந்த ரோப் கார் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு 4.5336 ஹெக்டேர் வன நிலம் தேவைப்படும். இதற்கு வனத்துறை முதலில் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து சபரிமலை வனப்பகுதியில் ரோப் கார் திட்டத்திற்காக பயன்படுத்தப்படும் வன நிலத்திற்கு பதிலாக கொல்லம் அருகே உள்ள பகுதியில் வனத்துறைக்கு நிலம் ஒதுக்க கேரள அரசு தீர்மானித்தது. இதற்கு வனத்துறை சம்மதம் தெரிவித்தது. இதன்படி சமீபத்தில் வனத்துறையிடம் அரசு நிலம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ரோப் கார் திட்டத்திற்கு கேரள வனவிலங்கு வாரியம் அனுமதி அளித்துள்ளது. இதனால் ரோப் கார் சேவை அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com