

பொதுநலன் மனுக்கள்
கொரோனா 3-வது அலை முன்னேற்பாடுகள், தடுப்பூசி முன்பதிவு செய்வதில் உள்ள இடர்பாடுகள் போன்ற கொரோனா தொடர்பான பிரச்சினைகள் குறித்து மும்பை ஐகோர்ட்டில் பல்வேறு பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு
உள்ளன.இந்த மனுக்கள் நேற்று தலைமை நீதிபதி தீபன்கர் தத்தா, நீதிபதி ஜி.எஸ்.குல்கர்னி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 3-வது டோஸ் கொரோனா தடுப்பூசி போட வேண்டியதன் அவசியம் குறித்து அரசுக்கு கேள்வி எழுப்பினர்.
இது பற்றி நீதிபதிகள் கூறியதாவது:-
அவசியமா?
மராட்டிய அரசு சமீபத்தில் கொரோனா தடுப்பு பணிக்குழுவுடன் ஆலோசனை நடத்தியது. அப்போது, 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 3-வது டோஸ் அல்லது துணை தடுப்பூசி எனப்படும் பூஸ்டர் டோஸ் போட
வேண்டிய அவசியம் ஏற்படும் என்று பணிக்குழு கூறியுள்ளது. அதாவது கோவிஷீல்டு தடுப்பூசி 2 டோஸ் போட்டுக்கொண்டவர்கள் தங்களை பாதுகாத்து கொள்ள அடுத்த 10 மாதத்தில் 3-வது டோஸ் அல்லது பூஸ்டர் டோஸ் போட
வேண்டும் என்றும், கோவேக்சின் 2 டோஸ் போட்டுக்கொண்டவர்கள் அடுத்த 6 மாதத்தில் 3-வது டோஸ் அல்லது பூஸ்டர் டோஸ் போட வேண்டும் என்று கூறியுள்ளது. பணிக்குழு கூறியதன் படி பொதுமக்கள் எதிர்காலத்தில் 3-வது டோஸ் போட வேண்டியது அவசியமா?. இது எந்தளவுக்கு அவசியம் என்பதை மராட்டிய அரசு சரிபார்க்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
பதிலளிக்க உத்தரவு
மேலும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு, தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு தனியாக ரெயில் டிக்கெட் கவுண்ட்டர் திறப்பது போன்ற மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து மத்திய, மராட்டிய அரசுகள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் அடுத்தகட்ட விசாரணையை வருகிற 23-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.