

எல்லையில் மோதல்
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இந்த தருணத்தில், லடாக்கில் அசல் எல்லைகட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன படைகள் கடந்த ஆண்டு தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டன. இதில் இந்திய படைகள், சீன படைகளுக்கு சரியான பதிலடி கொடுத்தன. அதைத்தொடர்ந்து இரு தரப்பும் அங்கு படைகளையும், தளவாடங்களையும் குவித்து, கடந்த மே மாதம் முதல் போர்ப்பதற்றம் நிலவி வருகிறது. அதற்கு மத்தியிலும், எல்லையில் அமைதியையும், சமாதானத்தையும் நிலைநாட்டுவதற்காக சீனாவுடன் இந்தியா தொடர்ந்து ராணுவ ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
சிக்கலான விவகாரம்
இந்த தருணத்தில் மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம். சீனாவுடனான எல்லை மோதலில், அமைச்சக ரீதியிலான பேச்சுவார்த்தை நடத்தப்படுமா?என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
சீனாவுடன் இந்தியா ராணுவ தளபதிகள் மட்டத்தில் 9 சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தி உள்ளன. இந்த விவகாரம் மிகவும் சிக்கலான விவகாரம் ஆகும். இது படைகள் சார்ந்தது. நீங்கள் பூகோளம் அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் எங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என புரிந்துகொள்ள முடியும். இதைத்தான் ராணுவ தளபதிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் 9 சுற்று பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். இதில் கொஞ்சம் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று நாம் நம்புகிறோம். ஆனால் அப்படி எதுவும் ஏற்படவில்லை. இத்தகைய சூழலில், பேச்சுவார்த்தையின் வெளிப்பாடு, களத்தில் தெரிய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேச்சுவார்த்தை தொடரும்
கடந்த ஆண்டு ரஷிய தலைநகர் மாஸ்கோவில் சீன வெளியுறவு மந்திரியை ஜெய்சங்கரும், சீன ராணுவ மந்திரியை ராஜ்நாத்சிங்கும் சந்தித்து பேச்சு நடத்தியது பற்றியும் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர், அப்போது எல்லையில் சில முனைகளில் படைகள் வாபஸ் பெறப்பட வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. இப்போதும் ராணுவ தளபதிகள் பேசுகிறார்கள். அவர்கள் தங்கள் பேச்சுவார்த்தையை தொடருவார்கள் என பதில் அளித்தார். மத்திய பட்ஜெட்டில் ராணுவத்துக்கான செலவினங்கள் 18 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இது கடந்த 15 ஆண்டுகளில் அதிகபட்ச
உயர்வு என்றும் அவர் தெரிவித்தார்.