இந்தியாவில் முடியாட்சி நடைபெறவில்லை: வாரிசு அரசியல் பற்றி அருண் ஜெட்லி விமர்சனம்

ஒருவர் தோற்றுவிட்டார், மற்றொருவர் பயணத்தை துவங்க போவது இல்லை என்று பிரியங்கா காந்தி அரசியல் வருகையை அருண் ஜெட்லி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் முடியாட்சி நடைபெறவில்லை: வாரிசு அரசியல் பற்றி அருண் ஜெட்லி விமர்சனம்
Published on

புதுடெல்லி,

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தனது வலைப்பக்கத்தில் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:- நேரு தொடங்கி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி வரை காங்கிரஸ் கட்சியில் குடும்ப அரசியல் தொடர்ந்தது.

துரதிருஷ்டவமாக, ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, குடும்ப ஆதிக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு காங்கிரஸ் கட்சி முயற்சி செய்தது. ஆனால், அது குறுகிய காலம் மட்டுமே நீடித்தது. அதன் பிறகு, காங்கிரஸ் கட்சியின் தலைவராக, சோனியா காந்தி நீண்ட காலம் பதவி வகித்தார். பின்னர், அந்தப் பதவியை தனது மகன் ராகுல் காந்தியிடம் ஒப்படைத்தார்.

எனவே, காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவி, பரம்பரை பரம்பரையாக ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு உறுப்பினர் (பிரியங்கா காந்தி) அரசியலில் இறங்கியுள்ளார். குடும்ப அரசியலை முன்னெடுக்கும் அரசியல் கட்சிகள், 2014-ஆம் ஆண்டில் கிடைத்த தோல்வியில் இருந்தும், 2019-ஆம் ஆண்டில் கிடைக்கப்போகும் தோல்வியில் இருந்தும் பாடம் கற்றுக் கொள்ள வாய்ப்பில்லை.

ஒருவர் (ராகுல் காந்தி) தோற்று விட்டார்; மற்றொருவர் (பிரியங்கா) பயணத்தை தொடங்கப் போவதில்லை. ஆனால், பாஜகவில் எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்த பிரதமர் நரேந்திர மோடி, தாம் பிரதமர் பொறுப்பை ஏற்கும் வரை, கட்சிப் பணியாற்றி அனைவரின் ஆதரவைப் பெற்றார்.

இந்தியாவில் முடியாட்சி நடைபெறவில்லை. தகுதியும், திறமையும் உள்ளவர்களை குடும்ப அரசியல் அங்கீகரிப்பதில்லை. குடும்ப அரசியலின் ஆதிக்கம் புதையும்போது, ஜனநாயகத்தின் உண்மையான வலிமை தெரியவரும். அப்போது, இந்திய மக்களுக்கு தேர்வு செய்யும் உரிமையை அது கொடுக்கும் என தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com