பீகார் அரசியல் நெருக்கடி: "ஜனநாயகத்தைக் காப்பாற்ற நினைப்பவர்கள் எங்களோடு இருப்பார்கள்" - மல்லிகார்ஜுன கார்கே

இந்தியா கூட்டணியை ஒற்றுமையாக வைத்திருக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்று காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கலபுரகி (கர்நாடகா),

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் நிலவும் சூழல் மூன்று நாட்களாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

இதன்படி இந்தியா கூட்டணியின் ஒரு அங்கமாக இருக்கும் மம்தா பானர்ஜி, மேற்கு வங்காளத்தில் தனித்தே அனைத்து இடங்களிலும் போட்டியிடுவோம் என்று அறிவித்தார். அவரைத் தொடர்ந்து, பாஞ்சாப்பில் காங்கிரசுடன் எந்த தொடர்பும் இல்லையென்றும், மாநிலத்தில் தனித்தே போட்டியிடுவோம் என்றும் ஆம் ஆத்மி முதல்-மந்திரி பகவந்த் மான் அறிவித்தார்.

இந்த பரபரப்பு ஓய்வதற்குள், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்த பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், பீகாரில் மீண்டும் பா.ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சியமைக்கப்போவதாகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், ஜனநாயகத்தைக் காப்பாற்ற நினைப்பவர்கள் தங்களோடு இருப்பார்கள் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக கர்நாடகாவில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கார்கே, "இந்தியா கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேறுவது குறித்து என்னிடம் எந்த தகவலும் இல்லை. அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதே தெளிவாகத் தெரியவில்லை.

நாளை நான் டேராடூனுக்குச் சென்று, பின்னர் அங்கிருந்து டெல்லிக்குச் செல்கிறேன். எனவே, முழுத் தகவலையும் பெற்றதும் என்னவென்று உங்களுக்குச் சொல்கிறேன். என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

அனைவரையும் ஒன்றிணைப்பதே எங்களுடைய முயற்சி. மம்தா பானர்ஜி, லாலு பிரசாத் யாதவ், சீதாராம் யெச்சூரி ஆகியோரிடம் பேசியிருக்கிறேன். நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்தால், கூட்டணி வெற்றிபெறும். அதோடு, ஜனநாயகத்தைக் காப்பதில் ஆர்வமுள்ளவர்கள் மனம் மாறாமல் எங்களுடன் இருப்பார்கள்" என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com