ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையால் ககன்யான் திட்டத்திற்கு பாதிப்பா...? வெளிவந்த புதிய தகவல்

2027-ம் ஆண்டின் முதல் கால் பகுதியில், முதன்முறையாக மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இலக்குடன் இஸ்ரோ உள்ளது.
புதுடெல்லி,
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் அதன் இறுதி கட்டத்திற்கு வந்துள்ளது. நடப்பு ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டில் தீவிர பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. 2026-ம் ஆண்டில் திட்டம் சார்ந்த தீவிர பயிற்சிகள் மீண்டும் தொடங்க உள்ளன.
இதற்காக 4 விண்வெளி வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் குரூப் கேப்டன்களான சுபான்ஷு சுக்லா, பிரசாந்த் பி. நாயர், அஜித் கிருஷ்ணன் மற்றும் அங்கத் பிரதாப் ஆவர். ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக, முதன்முறையாக மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த 4 பேரும், அதற்கு தேவையான பயிற்சிகளை மேற்கொள்வர். இவர்களில் சுபான்ஷு சுக்லா, பிரசாந்த் பி. நாயர் ஆகிய இருவரும் அமெரிக்காவில் உள்ளனர். வருகிற 29-ந்தேதி ஏவ தயாராக உள்ள ஆக்சியாம்-4 திட்டத்திற்காக அவர்கள் தயாராகி வருகின்றனர். இதனால், ககன்யான் திட்டத்திற்கு முன், அவர்களுக்கு விண்வெளியில் பறந்ததற்கான புதிய மதிப்புமிக்க அனுபவம் கிடைக்கும்.
எனினும், ஆபரேசன் சிந்தூரை முன்னிட்டு, இந்திய விமான படைக்கு வரும்படி, அஜித் அழைக்கப்பட்டார். ராணுவ பணிக்கு திரும்பிய சூழலில், அவர் மேற்கொள்ள வேண்டிய ககன்யான் திட்டத்திற்கான பயிற்சியில் தற்காலிக தடை ஏற்பட்டது. எனினும், இந்த திட்டத்தில் தொடர்ந்து பயணிக்க உள்ளார். திட்டம் தொடங்கும் வரை தொடர் பயிற்சியை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோன்று, 4 பேரில் ஒருவரான அங்கத் பிரதாப், பிஎச்.டி. படிப்பை தொடருவதற்காக விடுமுறையில் உள்ளார். விண்வெளி வீரர் பயிற்சிக்கு திரும்புவதற்கு முன்பாக, படிப்பை அவர் தொடர்கிறார்.
பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு செயலை தகர்க்கும் வகையிலான ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கைக்காக குரூப் கேப்டன்கள் பயன்படுத்தப்படலாம் என கூறப்பட்டது. எனினும் அவர்களில் அஜித் கிருஷ்ணன் மட்டும் ராணுவத்திற்கு அழைக்கப்பட்டார். எனினும், இதனால் ககன்யான் திட்டத்தில் பங்கேற்பதற்கோ அல்லது அதற்கான பயிற்சி மேற்கொள்வதிலோ பாதிப்பு இராது என கூறப்படுகிறது.
2027-ம் ஆண்டின் முதல் கால் பகுதியில், முதன்முறையாக மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இலக்குடன் இஸ்ரோ உள்ளது. இதன்படி, குறைந்த புவி வட்டப்பாதைக்கு 3 பேர் கொண்ட குழு அனுப்பப்படும். அவர்கள், திட்டத்தின்படி விண்வெளியில் சில நாட்கள் இருந்து, பின்னர் பாதுகாப்பாக பூமிக்கு திரும்புவார்கள்.
பெங்களூருவில் உள்ள விண்வெளி வீரர்கள் பயிற்சி மையத்தில், 2026-ம் ஆண்டில் வீரர்களின் பயிற்சி திட்டம் தீவிரப்படுத்தப்படும். அதில், விண்வெளி பயணத்திற்கான நவீன பயிற்சி முறைகள் மற்றும் தப்பிக்கும் தொழில் நுட்பங்கள் உள்ளிட்ட பயிற்சிகளில் கவனம் செலுத்தப்படும்.