விரைவில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு?

ஈரான் மீதான தாக்குதல் மற்றும் ஹார்மூஸ் ஜலசந்தி போக்குவரத்து முடக்கமே திடீர் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
விரைவில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு?
Published on

புதுடெல்லி,

இந்தியாவை சேர்ந்த பொதுத்துறை மற்றும் தனியார் எண்ணெய் நிறுவனங்கள் வளைகுடா நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி அவற்றை பெட்ரோல் டீசல் ஆக சுத்திகரித்து நமக்கு விற்பனை செய்கின்றன. அந்த வகையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏறும்போதெல்லாம் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயரும். ஆனால் கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் பெட்ரோல் ,டீசல் விலை உயரவில்லை கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக ஒரே விலையில் தான் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தசூழ்நிலையில், மேற்காசியாவில் ஏற்பட்ட மோதல்களால் சர்வதேச கச்சா எண்ணெய் விலை கடந்த இரண்டு மாதங்களில் 50 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது. இதனால் அரசு எண்ணெய் நிறுவனங்கள் இழப்பில் எரிபொருள்களை விற்பனை செய்து வருகிறது.

இரண்டு மாதங்களாக இந்த நஷ்டத்தை ஏற்று கொண்டிருக்கும் பொது துறை எண்ணெய் நிறுவனங்கள் நிலைமை கைமீறி போவதாக அரசுக்கு கூறி வருகின்றன. எனவே பிரச்சினையை சமாளிக்க பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதை தவிர வேறு வழியே இல்லை என்ற கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் அரசு தரப்பிலும் விரைவில் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படும் என தகவல் தெரிவித்திருப்பதாக பிடிஐ செய்தி நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது. ஈரான் போருக்கு பின்னர் வீட்டு உபயோக எல்.பி.ஜி. சிலிண்டர் விலை கடந்த மாதம் 60 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதே வேளையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை அடுத்தடுத்து உயர்ந்து 3000 ரூபாயை தாண்டி விட்டது. இதனால் உணவகங்களில் உணவுகளின் விலையும் டீ, காபி ஆகியவற்றின் விலைகளும் கிடுகிடுவென உயர்ந்து விட்டது.

இந்தநிலையில் விரைவில் பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்தால் மக்களின் பாக்கெட் மணி வெகுவாக பதம் பார்க்கப்படும். பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு உயர்த்தப்பட்டாலும் உடனடியாக அதன் தாக்கம் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் மீதுதான் வந்து விழும். காய்கறி, பால் ஆகியவை கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு லாரிகள் மூலமாகவே கொண்டுவரப்படுகின்றன. எனவே பெட்ரோல் , டீசல் விலை உயரும் போது இவற்றை கொண்டு வருவதற்கான போக்குவரத்து செலவு உயர்வதால் காய்கறிகள் மற்றும் பால் விலை உயரவாய்ப்பு உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஈரான் மீதான தாக்குதல் மற்றும் ஹார்மூஸ் ஜலசந்தி போக்குவரத்து முடக்கமே திடீர் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

இதனிடையே சில தினங்களுக்கு முன், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களில் விலை உயருகிறது என்று பரவி வரும் தகவலை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சக இணைச் செயலாளர் சுஜாதா சர்மா திட்டவட்டமாக மறுத்தார். பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை உயர்த்தும் எந்த திட்டமும் தற்போது மத்திய அரசிடம் இல்லை. எனவே, தயவுசெய்து பீதி அடைய வேண்டாம். வதந்திகளை நம்ப வேண்டாம். சில பகுதிகளில் தேவையற்ற பதற்றத்தால் அதிக அளவில் எரிபொருள் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com