5 மாநில சட்டசபை தேர்தல் தள்ளி வைக்கப்படுமா? உத்தரபிரதேசம் செல்லும் தேர்தல் ஆணையக்குழு..!

கொரோனா நிலவரம் குறித்து மத்திய சுகாதார செயலாளருடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தியது. இதனால் 5 மாநில சட்டசபை தேர்தல் தள்ளி வைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முடிவடைகிறது. உத்தரபிரதேச சட்டசபை பதவிக்காலம் மே மாதம் முடிவடைகிறது.

மேற்கண்ட 5 மாநிலங்களிலும் இரண்டு, மூன்று மாதங்களுக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை அடுத்த மாதம் தேர்தல் கமிஷன் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, நாட்டில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால், உத்தரபிரதேச சட்டசபை தேர்தலை ஓரிரு மாதங்கள் தள்ளி வைப்பது பற்றி பரிசீலிக்குமாறு மத்திய அரசையும், தேர்தல் கமிஷனையும் அலகாபாத் ஐகோர்ட்டு கடந்த 23-ந் தேதி கேட்டுக்கொண்டது.

இதுகுறித்து 28-ந் தேதி (இன்று) உத்தரபிரதேசத்துக்கு செல்லும்போது ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில், நாடு முழுவதும் கொரோனா நிலவரம் எப்படி இருக்கிறது என்பது குறித்து தேர்தல் கமிஷன் நேற்று ஆலோசனை நடத்தியது. மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷணுடன் இந்த ஆலோசனை நடத்தப்பட்டது.

நாடுதழுவிய கொரோனா நிலவரம் குறித்தும், குறிப்பாக தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் கொரோனா நிலவரம் பற்றியும் ராஜேஷ் பூஷண் எடுத்துரைத்தார். அந்த மாநிலங்களில் தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த அறிவுறுத்தினார்.

கொரோனாவை கட்டுப்படுத்த சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த வழிகாட்டு நெறிமுறைகள் பற்றி ராஜேஷ் பூஷண் தெரிவித்தார். சுமார் ஒரு மணி நேரம் அவர் விளக்கம் அளித்தார். அவர் அளித்த தகவல்கள் அடிப்படையில் நிலைமையை தேர்தல் கமிஷன் ஆராய்ந்தது.

மேலும், எல்லை பாதுகாப்பு படை, இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ், சஷாஸ்திரா சீமா பால், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு ஆகியவற்றின் உயர் அதிகாரிகளுடனும் தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தியது. அப்போது, தேர்தலில் போதைப்பொருளின் தாக்கம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுமாறு போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளை கேட்டுக்கொண்டது.

மேலும், தேர்தல் நடக்கும் மாநிலங்களின் சர்வதேச எல்லையில் தீவிர கவனம் செலுத்துமாறு எல்லை பாதுகாப்பு படை உள்ளிட்டவற்றின் அதிகாரிகளை வலியுறுத்தினர்.

இந்த ஆலோசனையை தொடர்ந்து, தலைமை தேர்தல் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று உத்தரபிரதேசத்துக்கு செல்கிறார்கள். அங்குள்ள நிலைமையையும் ஆய்வு செய்த பிறகு 5 மாநில சட்டசபை தேர்தலை நடத்துவதா? அல்லது தள்ளிவைப்பதா? என்று முடிவு செய்வார்கள் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com