ஜி7 உச்சி மாநாட்டை பிரதமர் மோடி புறக்கணிப்பு?

பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
புதுடெல்லி,
ரஷியா-உக்ரைன் மோதல் மற்றும் மேற்கு ஆசியாவின் நிலைமை உள்ளிட்ட உலகம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் குறித்து ஆலோசிக்கும் வகையில் ஜி7 உச்சி மாநாடு இந்த ஆண்டு கனடாவில் உள்ள ஆல்பர்ட்டா மாகாணத்தில் வருகிற 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு இன்னும் அழைப்பு வரவில்லை. இதனால் பிரதமர் மோடி ஜி7 உச்சி மாநாட்டை புறக்கணிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2023-ம் ஆண்டில் காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையிலான உறவு மோசம் அடைந்துள்ளது. இதனால் பிரதமர் மோடி ஜி7 மாநாட்டை இந்த ஆண்டு புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுத்த பிறகு, முதல் முறையாக பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி தலைமையில் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைந்த முதலாம் ஆண்டு நிறைவு குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.






