'குஜராத் மக்களுக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்' - ராகுல் காந்தி உறுதி

10 லட்சம் வேலைவாய்ப்பு, பயிர்க்கடன் தள்ளுபடி என குஜராத் மக்களுக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

குஜராத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 1 மற்றும் 5-ந்தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக ஆளும் பா.ஜனதா மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தீவிர பிரசாரங்களை தொடங்கி உள்ளன.

இந்த போட்டிக்கோதாவில் ஆம் ஆத்மியும் இணைந்துள்ளதால், குஜராத் தேர்தல் களத்தில் மும்முனை போட்டி ஏற்பட்டு உள்ளது. இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

காங்கிரஸ் வாக்குறுதி

குஜராத்தில் ஆட்சியை பிடிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் கட்சி, மக்களின் ஆதரவை பெறுவதற்காக பல்வேறு வாக்குறுதிகளையும் வழங்கி இருக்கிறது.

இதில் முக்கியமாக வேலைவாய்ப்பு, கடன் தள்ளுபடி, கியாஸ் சிலிண்டர் விலை குறைப்பு உள்ளிட்ட திட்டங்களை அறிவித்து உள்ளது. இந்த வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இரட்டை என்ஜின் வஞ்சகம்

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'ரூ.500-க்கு கியாஸ் சிலிண்டர், இளைஞர்களுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்பு, விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்படும். குஜராத் மக்களுக்கு நாங்கள் அளித்துள்ள இந்த வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்' என்று குறிப்பிட்டு உள்ளார்.

பா.ஜனதாவின் இரட்டை என்ஜின் வஞ்சகத்தில் இருந்து உங்களை பாதுகாப்போம் எனக்கூறியுளள ராகுல் காந்தி, மாநிலத்தில் மாற்றத்தின் திருவிழாவை கொண்டாடுவோம் என்றும் கூறியுள்ளார்.

ராகுல் காந்தியின் இந்த வாக்குறுதிகள் குஜராத்தில் கட்சித்தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com