

புதுடெல்லி
திங்கள் மாலை பிகாரிலிருந்து டெல்லி வந்து சேர்ந்த கோவிந்த் பாஜக தலைவர் அமித் ஷா வை சந்தித்தார். இருவரும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்தாக தெரிகிறது. செய்தியாளர்களை சந்தித்த அவர் ஒரு சிறிய குடிமகனிடம் பெரிய பொறுப்பு ஒப்படைக்கப்படவுள்ளது என்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெறாத பிஜூ ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, ஒய் எ ஸ் ஆர் காங்கிரஸ் ஆகியவை கோவிந்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
பிஜூ ஜனதா தளம் தனது நிலைப்பாட்டை கூறும்போது, முன்பு பி ஏ சங்மாவை வேட்பாளராக அறிவித்தோம். அவர் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர். பாஜகவும் ஆதரித்தது. இப்போது அவர்கள் தலித் வேட்பாளர் ஒருவரை அறிவித்துள்ளனர். குடியரசுத்தலைவர் பதவி அரசியலுக்கு அப்பாற்பட்டது. எனவே நாங்கள் கோவிந்திற்கு ஆதரவளிக்கிறோம் என்றது.
மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு அனைத்து எதிர்க்கட்சிகளும் கோவிந்தை ஆதரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எதிர்பாராத விதமாக தலித் வேட்பாளரை ஆளுங்கட்சி அறிவித்துவிட்டதால் அதற்கு இணையாக தாங்களும் வேட்பாளரை அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஜூன் 22 ஆம் தேதி கலந்து பேசவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அவர்கள் மத்தியில் முன்னாள் மக்களவைத் தலைவர் மீரா குமார், அம்பேத்கர் பேரன் பிரகாஷ் யஷ்வந்த், முன்னாள் அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே மற்றும் காந்திஜி பேரன் கோபால் கிருஷ்ண காந்தி ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.