

பாட்னா,
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளை கொண்ட மெகா கூட்டணி ஆட்சி சுமார் 2 ஆண்டுகளை எட்டியிருந்த நிலையில் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. ரயில்வே ஓட்டல்களுக்கு டெண்டர் விடப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக லாலு பிரசாத் யாதவ், அவரது குடும்பத்தினர் மீது சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது. இதையடுத்து தேஜஸ்வி யாதவ் பதவி விலக வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் விரும்பியது. ஆனால், ராஷ்டிரிய ஜனதா தளம் மறுத்துவிட்டது. இதனையடுத்து பதவி விலகிய நிதிஷ் குமார் மீண்டும் பா.ஜனதா உதவியுடன் மாநிலத்தில் ஆட்சியை தொடங்கி உள்ளது.
நிதிஷ் குமார் பீகார் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார் என காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. இன்று பீகார் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் 132 வாக்குகளுடன் வெற்றிப்பெற்றார்.
சட்டசபையில் பேசிய நிதிஷ் குமார் காங்கிரஸ் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார்.
பீகார் மக்கள் அளித்த தீர்ப்பானது (தேர்தல் முடிவு) மக்களுக்கு சேவைப் பணியாற்றுவதற்கு. மக்கள் நீதிமன்றம் மிகப்பெரிய நீதிமன்றம், மக்களுக்காக பணியாற்றுவதே என்னுடைய பணியாகும், ஒரு குடும்பத்திற்காக என்னால் பணியாற்ற முடியாது என்றார். லாலுவின் குடும்பத்தை குறிப்பிட்டு மறைமுகமாக பேசிஉள்ளார் நிதிஷ் குமார். மதசார்பின்மை குறித்து எனக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டாம். மதசார்பின்மை என்பது நடைமுறைப்படுத்த முடியும் விஷயமாகும். மதசார்பின்மை என்ற பெயரில் ஊழல் வழியாக சொத்துக்கள் சேர்க்கும் பாவ செயலை செய்பவர்களுடன் என்னால் இருக்கமுடியாது, என்றும் குறிப்பிட்டார் நிதிஷ் குமார்.
சட்டசபையில் பேசிய முன்னாள் துணை முதல்-மந்திரியும், லாலுவின் மகனுமான தேஜஸ்வி நிதிஷ் குமாரை துரோகி என தொடர்ச்சியான தாக்குதலை தொடர்ந்த நிலையில், நிதிஷ் குமார் ஆவேசமாக பேசிஉள்ளார்.