

சண்டிகார்,
பஞ்சாப்பில் புதிய முதல்-மத்திரியாக சரண்ஜித் சிங் சன்னி நேற்று பதவியேற்ற நிலையில், மாநிலத்தில் அடுத்த ஆண்டு (2022) நடைபெறும் சட்டசபை தேர்தலை மாநில காங்கிரஸ் தலைவர் சித்து தலைமையில் சந்திப்போம் என கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ஹரிஷ் ராவத் கூறியிருந்தார். 6 மாதங்களுக்குள் நடைபெற இருக்கும் தேர்தலை சன்னி தலைமையில் சந்திக்காதது குறித்து பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை எழுப்பி இருந்தனர். எதிர்க்கட்சிகளும் குற்றச்சாட்டுகளை கூறியிருந்தன.
இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சி இது குறித்து விளக்கம் அளித்து இருக்கிறது. இது தொடர்பாக, கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், சட்டசபை தேர்தலில் எங்கள் முகம் சரண்ஜித் சிங் சன்னி மற்றும் நவ்ஜோத் சிங் சித்துவும்தான். ஏனெனில் சாதாரண காங்கிரஸ் தொண்டர்களும், தலைவர்களும் அவர்களை ஆதரிக்கிறார்கள்.
இதில் ஒருவரையோ அல்லது மற்றொருவரையோ மட்டுமே யாராவது கூறினால், அது ஊடகங்களால் தவறாக விளக்கப்பட்டு இருப்பதுவே ஆகும் என்று தெரிவித்தார்.தங்கள் தலித் தலைவரை அவமதிப்பதை நிறுத்துமாறு பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை கேட்டுக்கொண்ட அவர், எந்த ஒரு மாநிலத்திலாவது ஒரு தலித் தலைவரை பா.ஜனதா சார்பில் முதல்-மந்திரியாக அமர்த்தியது உண்டா? என பிரதமர் மோடிக்கும் கேள்வி எழுப்பி உள்ளார்.