டிக்டாக் செயலி மீதான தடை நீக்கப்படுமா? - மத்திய மந்திரி பதில்


டிக்டாக் செயலி மீதான தடை நீக்கப்படுமா? - மத்திய மந்திரி பதில்
x
தினத்தந்தி 8 Sept 2025 7:45 PM IST (Updated: 8 Sept 2025 7:58 PM IST)
t-max-icont-min-icon

டிக்டாக் மீதான தடையை நீக்கும் எந்த திட்டமும் அரசிடம் எல்லை என்று அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக சீனாவை சேர்ந்த டிக்டாக் உள்பட 59 செயலிகள் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. பின்னர் ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே-ஸ்டோர்களில் இருந்து இந்த செயலிகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து, 2021 ஜனவரி முதல் இந்த தடை நிரந்தரமாக அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி சீனா சென்றார். அங்கு சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். மேலும் அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கை உள்ளிட்ட காரணங்களால், இந்தியா-சீனா இடையே மீண்டும் சுமூகமான உறவுகள் திரும்பி வருவதாக கூறப்பட்டது.

இதனால் இந்தியாவில் டிக்டாக் செயலி மீதான தடை நீக்கப்பட உள்ளதாகவும், சீன செயலிகளுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட உள்ளதாகவும் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில், இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் பதிலளித்தபோது, “டிக்டாக் செயலி மீதான தடையை நீக்க இதுவரை எந்த பரிந்துரையும் வரவில்லை. டிக்டாக் மீதான தடையை நீக்கும் எந்த திட்டமும் அரசிடம் எல்லை” என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story