காங்கிரஸ் கூட்டணி கதவை கமல்ஹாசன் தட்டுவாரா? திருநாவுக்கரசர் பதில்

காங்கிரஸ் கூட்டணி கதவை கமல்ஹாசன் தட்டுவாரா? என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பதிலளித்துள்ளார்.
காங்கிரஸ் கூட்டணி கதவை கமல்ஹாசன் தட்டுவாரா? திருநாவுக்கரசர் பதில்
Published on

புதுடெல்லி,

உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நலம் குறித்து விசாரிக்க தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று காலை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு வாஜ்பாயின் வளர்ப்பு மகள் நமீதா பட்டாச்சாரியா மற்றும் உறவினர்களை சந்தித்து பேசினார்.

பின்னர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நண்பர் கமல்ஹாசன் அரசியல் கட்சி தலைவர் என்ற முறையில் சோனியா காந்தியையும், ராகுல்காந்தியையும் சந்தித்து இருப்பது மகிழ்ச்சிக்கு உரியது. அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கமல்ஹாசனின் இந்த சந்திப்புக்கு பிறகு, காங்கிரசை காலாவதியான புத்தகம் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்து இருக்கிறார் என்றால், அது மிகவும் தரக்குறைவான விமர்சனம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து கமல்ஹாசனுக்காக காங்கிரஸ் கூட்டணிக்கதவு திறக்குமா? என்றும் நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு பதில் அளித்து திருநாவுக்கரசர் கூறியதாவது:-

காங்கிரசுடன் கூட்டணி பற்றி கமல்ஹாசனே பேசவில்லை. பிறகு நான் எப்படி பேச முடியும்? கூட்டணிக் கதவை கமல்ஹாசன் தட்டினால்தானே திறப்பதா? வேண்டாமா? என்று முடிவு செய்ய முடியும். அவர் கதவை தட்டவும் இல்லை. தட்டுவார் என்று நாங்கள் காத்திருக்கவும் இல்லை.

இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com