வெனிசுலா அதிபரை போல மோடியையும் டிரம்ப் நாடு கடத்துவாரா? காங். மூத்த தலைவர் சர்ச்சை பேச்சு

பிருத்வி ராஜ் சவுகானின் கருத்துக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மும்பை,
வெனிசுலா அதிபரை கடத்திச் சென்றதைப் போல நமது பிரதமரையும் டிரம்ப் கடத்தி செல்வாரா என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பிருத்வி ராஜ் சாவுகான் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநில முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய மந்திரியுமான பிருத்வி ராஜ் சவுகான் இது தொடர்பாக கூறியதாவது: வெனிசுலாவில் நடந்ததைப் போன்ற ஒன்று இந்தியாவில் நடக்குமா என்பதுதான் இப்போது எழும் கேள்வி. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், நமது பிரதமரை கடத்திச் செல்வாரா? என்றார்.
பிருத்வி ராஜ் சவுகானின் இந்தக் கருத்துக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வெனிசுலாவுடன் அணு ஆயுத நாடான இந்தியாவை ஒப்பிடுவதா என்றும், நிகோலஸ் மதுரோவுடன் பிரதமர் மோடியை ஒப்பிடுவதா என்றும் பலரும் தங்கள் ஆதங்கத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கீழ்த்தரமாக இறங்குவதையே பிருத்விராஜ் சவுகானின் கருத்து வெளிப்படுத்துவதாக பாஜகவும் சாடியுள்ளது.
இது தொடர்பாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கூறியதாவது: ‘‘காங்கிரஸ் தலைவர் பிருத்விராஜ் சவுகான், இந்தியாவின் நிலையை வெட்கமின்றி வெனிசுலாவுடன் ஒப்பிடுகிறார். வெனிசுலாவில் நடந்தது இந்தியாவிலும் நடக்குமா என்று கேட்டதன் மூலம் காங்கிரஸ் இந்தியாவுக்கு எதிரான மனநிலையைக் கொண்டிருப்பதை தெளிவுபடுத்துகிறது. ஒவ்வொரு நாளும் காங்கிரஸ் கட்சி தரம் தாழ்ந்து செல்வதையே இது காட்டுகிறது’’ என்றார்.






