

பெங்களூரு,
கர்நாடகாவில் 2023-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தபோது, முதல்-மந்திரி அதிகார பகிர்வு தொடர்பான தகவல் வெளியானது. இதன்படி, இரண்டரை வருட காலம் சித்தராமையாவும், மற்றொரு இரண்டரை வருட காலத்தில் டி.கே. சிவக்குமாரும் முதல்-மந்திரி பதவியை வகிப்பார்கள் என தகவல் கசிந்தது.
ஆனால், கட்சியின் தலைமையிடம் இருந்து இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை. கர்நாடகாவில் தற்போது, முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே. சிவக்குமாரும் பதவி வகித்து வருகின்றனர்.
எனினும், தலைமைத்துவம் தொடர்பான பூசல் கட்சிக்குள் புகைந்து கொண்டே இருந்தது. இந்நிலையில், 2025-ம் ஆண்டு நவம்பரில் இந்த ஆட்சியின் முதல் இரண்டரை வருட காலம் நிறைவடைந்தது. இதனால், முதல்-மந்திரி மாற்றம் செய்யப்படுவார் என யூகங்கள் கிளம்பின.
இந்நிலையில், நெருக்கடியான காலகட்டத்தில் சித்தராமையா எனக்கு துணை நின்றவர் என்றும், சித்தராமையாவின் நெருக்கடியான காலகட்டத்தில் அவருக்கு நான் துணை நின்றேன் என்றும் டி.கே. சிவக்குமார் கூறினார். இதன்பின்னர் இந்த விவகாரம் பெரிதும் பேசப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்ய கட்சி மேலிடம் உத்தரவு அளித்து விட்டது என சித்தராமையாவின் மகனான எம்.எல்.சி. யதீந்திரா கூறிய நிலையில், இந்த விவகாரம் மீண்டும் பரபரப்படைந்து உள்ளது.
இதுபற்றி டி.கே. சிவக்குமாரிடம் கேட்கப்பட்டபோது, இந்த விவாதத்திற்குள் மீண்டும் செல்ல அவர் மறுத்து விட்டார். ஆனால் அந்த கேள்விக்கு, காலம் பதில் சொல்லும் என்று கூறினார்.
கட்சியின் மேலிடம் மீது விசுவாசம் வைத்துள்ளேன் என கூறும் அவர், கட்சி என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு அனைத்து தலைவர்களும், ஆதரவாளர்களும் கட்டுப்பட வேண்டும் என கூறியுள்ளார். இதனால், முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் இருந்து அவர் பின்வாங்காமல் உள்ளார் என்பது போன்று பேசியுள்ளார்.