காற்று எரிசக்தி.. உலகளவில் 4-ம் இடம் பிடித்த இந்தியா - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் உள்ள 'பாஸ்ட் பிரீடர் ரியாக்டர்' அதன் செயல்பாட்டு நிலையை எட்டியுள்ளது ஒரு வரலாற்றுச் சாதனை என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
காற்று எரிசக்தி.. உலகளவில் 4-ம் இடம் பிடித்த இந்தியா - பிரதமர் மோடி பெருமிதம்
Published on

புதுடெல்லி,

மனதின் குரல் எனப்படும் மன் கி பாத் நிகழ்ச்சி மூலமாக ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்று கிழமைகளில் பிரதமர் மோடி வானொலி மூலமாக நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இன்றைய மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது-

புத்த பூர்ணிமாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். புத்தரின் வாழ்க்கை போதனைகள் இன்றும் நாட்டு மக்களுக்கு தேவையானதாகவும் பொருத்தமானதாகவும் உள்ளன. அமைதி என்பது ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருந்து தொடங்குகிறது என்று அவர் போதித்துள்ளார்.

தன்னை வெல்வதே மகத்தான வெற்றி என்பதே அவரது போதனை. உலகம் தற்போது எதிர்கொண்டு வரும் மோதல்கள், பதற்றங்கள் காரணமாக புத்தரின் போதனைகள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது மிகப் பொருத்தமானதாக உள்ளன.

இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் காற்று எரிசக்தி ஒரு புதிய வரலாற்றை எழுதி வருகிறது. இந்தியா சமீபத்தில் காற்று எரிசக்தி உற்பத்தியில் 56 கிகாவாட் (56 GW) என்ற மிகப்பெரிய மைல்கல்லைக் கடந்துள்ளது. இதன் மூலம் உலக அளவில் காற்று எரிசக்தி உற்பத்தியில் இந்தியா 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.

குறிப்பாக குஜராத், தமிழ்நாடு, மராட்டியம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் இத்துறையில் சிறந்து விளங்குகின்றன. ஒரு காலத்தில் தரிசு நிலங்களாகக் கருதப்பட்ட கட்ச், பதான் மற்றும் பனஸ்காண்டா போன்ற பகுதிகள் இன்று புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் மையங்களாக மாறி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன.

அறிவியலை வளர்ச்சியுடன் இணைப்பதே இந்தியாவின் நோக்கம். சிவில் அணுசக்தி திட்டத்தில் இந்தியாவின் முன்னேற்றம் கண்டுள்ளது. தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் உள்ள 'பாஸ்ட் பிரீடர் ரியாக்டர்' அதன் செயல்பாட்டு நிலையை எட்டியுள்ளது ஒரு வரலாற்றுச் சாதனை. இது முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பது இந்திய விஞ்ஞானிகளின் திறமைக்குச் சான்றாகும். இந்திய தேசிய ஆவணக்காப்பகம் சுமார் 20 கோடிக்கும் அதிகமான ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டு வந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com