

அமராவதி,
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பசுவுல்லங்கா என்னும் இடத்தில் இருந்து சலாதிவரி பாலெம் என்னும் இடம் நோக்கி பயணிகள் ஒரு படகு நேற்று மாலை கவுதமி ஆற்றில் சென்று கொண்டிருந்தது. இவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் ஆவர்.
இந்த நிலையில் நீர்ச்சுழலில் சிக்கிய அந்த படகு ஆற்றின் மீது கட்டப்பட்டு வரும் பாலத்தின் தூண் ஒன்றின் மீது பயங்கரமாக மோதி கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்த 30 பேரும் ஆற்றுக்குள் விழுந்து தத்தளித்தனர்.
இதையடுத்து விசாகப்பட்டினம் மற்றும் ராஜமகேந்திரவரம் நகரங்களில் இருந்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்களுடன் உள்ளூர் போலீசாரும் இணைந்து 23 பயணிகளை பத்திரமாக மீட்டனர். எனினும் மற்ற 7 பேரை காணவில்லை. அவர்களின் கதி என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. அவர்களை தேடும்பணி தொடர்ந்து நீடித்து வருகிறது. இன்று இரண்டாவது நாளாக மீட்பு பணி தொடரும் நிலையில் கனமழை மற்றும் காற்று இடையூறை ஏற்படுத்தியுள்ளது. மீட்பு பணியில் கடற்படையை சேர்ந்த முக்குளிப்பவர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசுவுல்லங்காவில் இருந்து கோதாவரி ஆறு கடலில் கலக்கும் யானாம் கடற்கரை வரையில் தேடும் பணி நடத்தப்படுகிறது.
6 மாணவிகள் மற்றும் ஒரு பெண்ணை காணவில்லை என மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் துணை கமாண்டர் மதுசூதன் ரெட்டி பேசுகையில், கனமழை மற்றும் காற்று எங்களுடைய மீட்பு பணியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோதாவரி ஆற்றிலிருந்து தண்ணீர் அதிகரித்து உள்ளதால், ஆற்றில் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து செல்கிறது. எங்களுடைய தேடுதல் பணி தொடர்கிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை தெளிவானதும் மீட்பு பணியில் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.