நாடாளுமன்ற குளிர்கால தொடர் 29-ந் தேதி தொடங்குகிறது

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை 29-ந் தேதி முதல் நடத்த கேபினட் கமிட்டி சிபாரிசு செய்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரும், மழைக்கால கூட்டத்தொடரும் திட்டமிட்ட நாளுக்கு முன்பே முடித்துக்கொள்ளப்பட்டன.

இந்தநிலையில், இந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடர் குறித்து முடிவு எடுப்பதற்காக, ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.

அதில், குளிர்கால கூட்டத்தொடரை இம்மாதம் 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் 23-ந் தேதி வரை நடத்த பரிந்துரை செய்யப்பட்டது.

கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் நடந்த கூட்டத்தொடர்களை போலவே, கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படும். மக்களவை, மாநிலங்களவை இரண்டும் ஒரே நேரத்தில் நடக்கும். எம்.பி.க்கள், சமூக இடைவெளியை பின்பற்றி கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் இருக்கும்போது, எம்.பி.க்கள் உள்பட அனைவரும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு, கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். இந்த கூட்டத்தொடர் 20 அமர்வுகள் நடைபெறும். இது, பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பு நடக்கும் கூட்டத்தொடர் ஆகும்.

மேலும், உத்தரபிரதேசம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு முன்பு இத்தொடர் நடக்கிறது. இதனால் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சமீபத்தில் நடந்த 3 மக்களவை தொகுதிகள், 29 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பா.ஜனதா பின்னடைவை சந்தித்த நிலையில், குளிர்கால கூட்டத்தொடர் நடக்கிறது.

இதில், முக்கிய பிரச்சினைகளை எழுப்பி, மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு, சமையல் எண்ணெய் விலை உயர்வு, காஷ்மீரில் அப்பாவிகள் மீதான பயங்கரவாதிகள் தாக்குதல், லகிம்பூர் கேரியில் விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பிரச்சினைகள் எழுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெகாசஸ் உளவு பிரச்சினையை எழுப்பி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், இந்த ஆண்டின் மழைக்கால கூட்டத்தொடர் முடங்கியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com