நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்: பா.ஜனதா தேசிய நிர்வாகிகள் 5, 6-ந் தேதிகளில் ஆலோசனை

நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்களுக்கு தயாராவது பற்றி பா.ஜனதா தேசிய நிர்வாகிகள் 5 மற்றும் 6-ந் தேதிகளில் ஆலோசனை நடத்துகிறார்கள்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

2024-ம் ஆண்டு, நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதில் வெற்றி பெற்று, தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா விரும்புகிறது. இதற்கான செயல்திட்டங்களை வகுத்து வருகிறது.இதுபோல், அடுத்த ஆண்டு கர்நாடகா, திரிபுரா மற்றும் சில வடகிழக்கு மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடக்கின்றன. அவற்றிலும் வெற்றி பெற பா.ஜனதா இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்தநிலையில், பா.ஜனதாவின் தேசிய அளவிலான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், வருகிற 5 மற்றும் 6-ந் தேதிகளில் டெல்லியில் நடக்கிறது. கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமை தாங்குகிறார்.

தேசிய நிர்வாகிகள் மட்டுமின்றி, மாநிலங்களின் பா.ஜனதா தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர்கள் (அமைப்பு) ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். கூட்டத்தில், பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று தெரிகிறது.

நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்களுக்கு தயாராவது பற்றி இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்படுகிறது. தற்போது நடந்து வரும் கட்சியின் அமைப்பு சார்ந்த பணிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

சர்வதேச பொருளாதார மந்த நிலைக்கிடையே இந்தியா எட்டிய பொருளாதார வளர்ச்சி பற்றியும், அதை நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்வது பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது. ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்பது பற்றியும் பேசப்படுகிறது.

ஜி20 அமைப்பின் மாநாடு டெல்லியில் நடக்கும்போது, அதில் பங்கேற்க வரும் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு இந்தியாவின் கலாசார, பிராந்திய பன்முகத்தன்மையை விளக்கக்கூடிய நிகழ்ச்சிகளை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அந்த நிகழ்ச்சிகளை பொதுமக்களிடம் எடுத்துச் சென்றால், நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் பா.ஜனதாவுக்கு உதவியாக இருக்கும் என்ற கருத்து எழுந்துள்ளது. அதுபற்றியும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com