ஜனாதிபதி ராம் நாத் கோவிந்துடன் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு ; கருணாநிதி படத்திறப்பு விழாவுக்கு அழைப்பு

டெல்லியில் ஜனாதிபதி ராம் கோவிந்தை தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார் அப்போது கருணாநிதி படத்திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
Image courtesy : @rashtrapatibhvn
Image courtesy : @rashtrapatibhvn
Published on

சென்னை,

தமிழகத்தில் நடந்து முடிந்த 16-வது சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபிறகு, முதல் முறையாக கடந்த மாதம் (ஜூன்) 17-ந்தேதி டெல்லி சென்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டின் பல முக்கிய கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் மு.க.ஸ்டாலின் மனுவாக கொடுத்தார். மேலும், மேகதாது அணை பிரச்சினை குறித்து விரிவாக எடுத்துரைத்த மு.க.ஸ்டாலின், அந்த திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வலியுறுத்துமாறும் பிரதமரிடம் கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில், 2-வது முறையாக நேற்று மாலை 5 மணியளவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்றார். அவரைத்தொடர்ந்து எம்.பி.க்கள் கனிமொழி, தயாநிதிமாறன் ஆகியோரும் டெல்லி புறப்பட்டு சென்றனர்.

இன்று மதியம் 12.15 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது, நீட்' தேர்வை ரத்து செய்வது குறித்தும், கர்நாடகாவில் மேகதாது என்னும் இடத்தில் அம்மாநில அரசு அணை கட்ட முயற்சிப்பதை தடுத்து நிறுத்துவது குறித்தும், தமிழக மக்கள்தொகைக்கு ஏற்ப அதிக அளவில் கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்பது குறித்தும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுதினார். மேலும், தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்தும் பேசினார்.

அதேபோல், மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதியின் 3-வது ஆண்டு நினைவு நாள் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 7-ந்தேதி வருகிறது. தி.மு.க. ஆட்சி அமைத்த பிறகு முதல் முறையாக வருவதால், அவரது நினைவு நாள் நிகழ்ச்சியை பெரிய அளவில் நடத்தவும் தி.மு.க. திட்டமிட்டுள்ளது. சட்டசபையில் கருணாநிதியின் உருவப்படத்தை திறக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. எனவே, இந்த படத்திறப்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com