மூத்த மத்திய மந்திரிகளுடன் மோடி ஆலோசனை மந்திரிசபை விஸ்தரிக்கப்படுமா?

பிரதமர் மோடி, மூத்த மத்திய மந்திரிகளை தனது இல்லத்துக்கு வரவழைத்து சந்தித்தார். மத்திய மந்திரிசபை விஸ்தரிப்பு பற்றி அவர்கள் விவாதித்திருக்கக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
மூத்த மத்திய மந்திரிகளுடன் மோடி ஆலோசனை மந்திரிசபை விஸ்தரிக்கப்படுமா?
Published on

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. கூட்டணி அரசு தொடர்ந்து 2-வது முறையாக பதவி ஏற்று 2 ஆண்டுகள் முடிந்து விட்டன. இதுவரை மத்திய மந்திரிசபை விஸ்தரிக்கப்படவில்லை. மாற்றியமைக்கப்படவும் இல்லை. இந்த மத்திய மந்திரிசபையில் இருந்து ஏற்கனவே சிவசேனா, சிரோமணி அகாலிதளம் மந்திரிகள் விலகி உள்ளனர். பா.ஜ.க.வின் கூட்டணி கட்சிகளில் இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) சார்பில் ராம்தாஸ் அத்வாலே மட்டுமே பதவி வகிக்கிறார்.

மத்திய மந்திரிகளாக பதவி வகித்த ராம்விலாஸ் பஸ்வான், சுரேஷ் அங்காடி ஆகிய இருவரும் மரணம் அடைந்துள்ளனர். இதனால் மத்திய மந்திரிசபையில் பல காலி இடங்கள் உள்ளன. மூத்த மத்திய மந்திரிகளான பியூஷ் கோயல், நரேந்திர சிங் தோமர், பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர் கூடுதல் பொறுப்புகளை வகித்து வருகின்றனர்.

எனவே கூட்டணிக் கட்சிகளுக்கு மந்திரி பதவி அளிக்கும் வகையிலும், உத்தரபிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ள நிலையில் அந்த மாநிலத்துக்கு முக்கிய பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையிலும், மத்திய மந்திரி சபை எந்த நேரமும் விஸ்தரிக்கப்படலாம் என்ற ஊகங்கள் வலுத்து வருகின்றன.இதை உறுதி செய்வதுபோல பிரதமர் மோடி, 5 சந்திப்புகளில் மத்திய மந்திரிகளை குழுக்களாக அழைத்து அவர்களது அமைச்சகங்களின் பணி நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

இந்தநிலையில் பிரதமர் மோடி, டெல்லியில் எண்.7, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு மூத்த மத்திய மந்திரிகளான அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோரை நேற்று வரவழைத்து சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடி, அவர்களுடன் மத்திய மந்திரிசபை விஸ்தரிப்பு மற்றும் மாற்றி அமைத்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தி இருக்கக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com