பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட காஷ்மீர் சென்றது தேசிய பாதுகாப்பு படை

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் தேசிய பாதுகாப்பு படையினரை ஈடுபடுத்த மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. #NSG
பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட காஷ்மீர் சென்றது தேசிய பாதுகாப்பு படை
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை முற்றிலும் ஒழிக்க ராணுவம் அதிரடி தாக்குதல்களை மேற்கொள்ளும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்தார். காஷ்மீரில் பூரண அமைதியை நிலை நிறுத்துவதுதான் மத்திய அரசின் லட்சியம் என்றும் பயங்கரவாதிகளின் எந்த ஒரு வன்முறைச் செயலுக்கும் பதிலடி பலமாக இருக்கும் என்றும் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்காக, தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த சிறப்பு கமாண்டோ படையினர், அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொலைவில் இருக்கும் இலக்கையும் துல்லியமாகச் சுடும் ஸ்னிப்பர் துப்பாக்கிகள், ரேடார்கள் என உரிய தொழில்நுட்ப உதவியுடன் பணியாற்றவுள்ள இந்த வீரர்கள், தற்போது ஸ்ரீநகர் அருகே ஹம்ஹஹா பகுதியில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படையினரின் முகாமில் அவர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

குடியிருப்புப் பகுதியிலும் ஊடுருவி துல்லியத் தாக்குதல் நடத்தும் திறன்பெற்ற ஹெச்ஐடி கமாண்டோபடையைச் சேர்ந்த சுமார் 12 ஸ்னிப்பர் வீரர்கள் கடந்த 2 வாரங்களாக அங்கு பயிற்சியில் இருக்கின்றனர். தேவையேற்படும் சூழலில் அந்த எல்லைப் பாதுகாப்புப் படையினர் முகாமில் சுமார் 100 என்எஸ்ஜி கமாண்டோ படையினர் வரை நிலைநிறுத்த உள்துறை அமைச்சகம் கருத்தில் கொண்டுள்ளது.

விமானக் கடத்தல் தடுப்பிலும் அவர்கள் திறன் பெற்றுள்ளதால், விமான நிலையத்துக்கு அருகே அவர்களுக்கு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்த நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் விரைவில் அவர்கள் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தகைய நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினரின் பலி எண்ணிக்கையை குறைப்பதற்கு, என்எஸ்ஜி கமாண்டோ படையினர் உதவுவார்கள் என்று நம்பப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com