

புதுடெல்லி/ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரில் மெகபூபா தலைமையிலான மக்கள் ஜனநாய கட்சி - பாரதீய ஜனதா கூட்டணி அரசு கவிழ்ந்தது.
மெகபூபா அரசுக்கு கொடுத்த ஆதரவை பா.ஜனதா திரும்பபெற்றதும் ஆட்சி முடிவுக்கு வந்தது. பயங்கரவாதம், வன்முறை, அடிப்படைவாதம் ஆகியவை, காஷ்மீரில் வளர்ந்து வருகின்றன. மக்களின் அடிப்படை உரிமை, குறிப்பாக வாழும் உரிமை, பேசும் உரிமை ஆகியவற்றுக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது என்றுகூறி பா.ஜனதா வெளியேறியது. மாறாக ராஜினாமா கடிதம் கொடுத்த மெகபூபா முப்தி, படை பலத்தை பயன்படுத்தும் ராணுவ கொள்கை, காஷ்மீரில் பலன் அளிக்காது, காஷ்மீர் பகைவர்கள் பிரதேசம் கிடையாது என்று குறிப்பிட்டார்.
இதற்கிடையே மாநிலத்தில் மீண்டும் கடுமையான பாதுகாப்பு கொள்கையை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகியது. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றுதான் மத்திய அரசு விரும்புகிறது என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
இந்நிலையில் உயர்ரக ஆயுதங்கள் மற்றும் ரேடார்கள் உதவியுடன் தேசிய பாதுகாப்பு படை பயங்கரவாதத்திற்கு எதிரான ஆப்ரேஷனில் இறக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு ஆப்ரேஷன்களுக்கு தேசிய பாதுகாப்பு படை களமிறக்கப்படும் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியது. ஜம்மு கஷ்மீர் போலீசுக்கும் தேசிய பாதுகாப்பு படை குர்கான் அருகே சிறப்பு பயிற்சியை வழங்கியது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இருக்கும் சிறப்புப்படையான தேசிய பாதுகாப்பு படையினர் கமாண்டர்கள் ஸ்ரீநகர் அருகேஉள்ள எல்லைப் பாதுகாப்பு படை முகாமில் பயிற்சியை மேற்கொள்கிறார்கள். கடந்த இரண்டு வாரமாக சிறப்பு பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். விமான கடத்தலை தடுப்பதில் சிறப்பான தேர்ச்சிபெற்ற தேசியப் பாதுகாப்பு படையை விமான நிலையம் அருகே நிறுத்தப்பட்டுள்ளார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். தேசிய பாதுகாப்பு படையை பயன்படுத்துவதால் பாதுகாப்பு படையினர் உயிரிழப்பு குறையும் என அதிகாரிகள் குறிப்பிடுகிறார்கள்.
3டி ரேடாருடன் சுவரை தாண்டி பதுங்கியிருப்பவர்களை துல்லியமாக வேட்டையாடுவதற்கான ஆயுதங்களை கொண்டுள்ள தேசிய பாதுகாப்பு படை பயங்கரவாதத்திற்கு எதிரான ஆப்ரேஷனை வெற்றிகரமாக முடிக்க மிகவும் உதவியாக இருக்கும், பாதுகாப்பு படைகளின் உயிரிழப்பை தடுக்கவும் வழிவகை செய்யும் என உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.