வேளாண் சட்டங்கள் வாபஸ்: விவசாயிகளுக்கு கிடைத்த தற்காலிக வெற்றி - சித்தராமையா கருத்து

வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டது, விவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்த தற்காலிக வெற்றி என்று சித்தராமையா கருத்து தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்கள் வாபஸ்: விவசாயிகளுக்கு கிடைத்த தற்காலிக வெற்றி - சித்தராமையா கருத்து
Published on

பெங்களூரு,

பிரதமர் மோடி அறிவித்துள்ள 3 வேளாண் சட்டங்கள் வாபஸ் குறித்து எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மோடி தலைமையிலான மத்திய அரசு, மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெரும் நெருக்கடியில் இருந்தபோது, கடந்த 2020-ம் ஆண்டு மே-ஜூன் மாதங்களில் விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டங்கள் அவசர சட்டங்களாக அறிவிக்கப்பட்டன. இதை எதித்து ஒரு ஆண்டுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராடி வருகிறார்கள்.

கடைசியாக குருநானக் ஜெயந்தி தினத்தன்று பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். இது விவசாயிகளின் நீண்ட நெடிய போராட்டத்திற்கு கிடைத்த தற்காலிக வெற்றி. விவசாயிகளின் போராட்டத்தை நாடே பெருமையுடன் நினைவு கொள்கிறது.

உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களில் அடுத்த ஆண்டு (2022) தொடக்கத்தில் தேர்தல் நடக்கவுள்ளது. அதனால் இந்த தேர்தல் முடியட்டும், பிறகு பார்த்துக் கொள்ளலாம் நினைத்து இந்த சட்டங்களை மத்திய அரசு தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளது. நமது பெருமை மிக்க விவசாயிகள் தாங்களும் வெற்றி பெற்று, நாட்டையும் சிறிது வெற்றியின் பக்கம் கொண்டு வந்துள்ளனர்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com