போலி நகையை அடகு வைத்து மோசடி: தலைமறைவாக இருந்த பெண் 3 ஆண்டுக்கு பிறகு கைது

தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தலைமறைவானார்.
போலி நகையை அடகு வைத்து மோசடி: தலைமறைவாக இருந்த பெண் 3 ஆண்டுக்கு பிறகு கைது
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் செறுவன்னூர் பகுதியை சேர்ந்தவர் வர்ஷா (வயது 38). இவர் கடந்த 2022-ம் ஆண்டு கோழிக்கோட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், 226 கிராம் நகையை அடகு வைத்து ரூ.9 லட்சம் பணம் பெற்றார். பின்னர் நிதி நிறுவன ஊழியர்கள் தணிக்கை செய்த போது, வர்ஷா அடகு வைத்தது போலி நகை என்பதும், ரூ.9 லட்சம் மோசடி செய்ததும் தெரியவந்தது.

இதுப்பற்றி நிதி நிறுவனத்தினர் வர்ஷாவிடம் கேட்டு உள்ளனர். இதையடுத்து அவர் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு ஸ்கூட்டரில் அற்றப்புழா பாலம் அருகே சென்றார். அங்கு ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு தப்பி சென்றார். இதுகுறித்து நிதி நிறுவன உரிமையாளர்கள் கோழிக்கோடு போலீசில் புகார் அளித்தனர்.

அதன் பேரில் போலீசார், சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் இணைந்து விசாரணை நடத்தினர். மேலும் தலைமறைவான வர்ஷாவை தேடி வந்தனர். இந்தநிலையில் வர்ஷா தனது குடும்பத்தினருடன் வாட்ஸ்-அப் செயலி மூலம் பேசி வந்து உள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தியதில், அவர் திருச்சூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருவது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று வர்ஷாவை கைது செய்தனர். பின்னர் அவர் கோழிக்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பண மோசடி வழக்கில், தலைமறைவான பெண் 3 ஆண்டுக்கு பிறகு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com