

பெங்களூரு,
பெங்களூரில் சின்னத்திரை நடிகை என கூறி, சமூக வலைதளம் மூலம் வீடியோ வெளியிட்டு பணக்காரர்களை குறிவைத்து பணம் பறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரை சேர்ந்த வனிதா என்ற பெண், முதலில் சமுக வலைதளங்களில் தன்னை ஒரு சின்னத்திரை நடிகை என்று அறிமுகப்படுத்தி ஏராளமான வீடியோக்களை வெளியிட்டு பணக்காரர்களுடன் நட்பானார்.
இந்த நிலையில் வனிதா பணக்காரர்களை தொடர்பு கொண்டு தான் மிகவும் கஷ்டத்தில் இருப்பதாக கூறியும், எனது நகைகளை அடகு வைத்துள்ளேன், அதை திரும்ப பெற எனக்கு அவசரமாக பணம் தேவை. இரண்டு அல்லது மூன்று நாட்களில் கடனை திருப்பி செலுத்தி விடுகிறேன் என்று கூறி பணம் பெற்று வந்தார்.
சி.சி.டி.வி. காமிராக்கள் இல்லாத இடத்துக்கு வரவழைத்து அவர்களிடம் பணம் பெற்று வந்தார். இந்த நிலையில் அவரிடம் பணம் கொடுத்தவர்கள் அதை திரும்ப கேட்டு தொடர்பு கொண்ட போது வனிதா அவர்களது அழைப்பை ஏற்கவில்லை.
இதனால் பணத்தை இழந்த ஒரு வாலிபர் பெங்களூரு மகாலட்சுமி லேஅவுட் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது வனிதா மீது மேலும் பல காவல் நிலையங்களில் பணம் பறித்து மோசடி செய்த வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.