படுக்கை அறையில் வெடித்த மோதல்...தூங்கிய கணவரை கழுத்தை இறுக்கி கொன்ற மனைவி

கணவன், மனைவி இருவரும் ஒருவரையொருவர் நடத்தையில் சந்தேகம் அடைந்தனர்.
திருப்பதி,
ஆந்திர மாநிலம், ஏலூரு மாவட்டம், நுஜி வீடு அடுத்த கிழக்கு திகவல்லியை சேர்ந்தவர் சுதீர் ரெட்டி (வயது 44). இவரது மனைவி ஞான பிரசன்னா (வயது 40)
சுதீர் ரெட்டி ஐதராபாத், குகட் பள்ளி, விவேகானந்தா நகரில் குடும்பத்தினருடன் தங்கி இருந்து தனியா நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேனேஜராக வேலை செய்து வந்தார். கணவன், மனைவி இருவரும் ஒருவரையொருவர் நடத்தையில் சந்தேகம் அடைந்தனர். இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சுதீர் ரெட்டி தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியை அடித்து, உதைத்து துன்புறுத்தி வந்தார்.இதனால் ஞான பிரசன்னாவுக்கு கணவர் மீது கடுமையான கோபம் ஏற்பட்டது.
சம்பவத்தன்று இரவு மது போதையில் வீட்டிற்கு வந்த சுதீர் ரெட்டி படுக்கை அறையில் இருந்த ஞான பிரசன்னாவை உன் நடத்தையில் சந்தேகம் இருக்கிறது என கடுமையாக சண்டைபோட்டுள்ளார். அப்போது இருவருக்கும் மோதல் வெடித்தது. அதன்பின்னர் சுதீர் ரெட்டி படுக்கையறையில் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது ஞான பிரசன்னா வீட்டிலிருந்த கயிறை எடுத்து வந்து கணவரின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். பின்னர் கணவரை படுக்கையில் இருந்து கீழே தள்ளினார். இதில் சுதீர் ரெட்டி உடலில் காயம் ஏற்பட்டது. காலை உறவினர்களுக்கு போன் செய்த ஞான பிரசன்னா கணவர் மது போதையில் படுக்கையில் இருந்து கீழே விழுந்து இறந்து விட்டதாக நம்ப வைத்தார்.
சகோதரனின் சாவில் மர்மம் இருப்பதாக சுதீர் ரெட்டியின் சகோதரி போலீசில் புகார் செய்தார். போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் சுதீர் ரெட்டி கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. போலீசார் ஞான பிரசன்னாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.






