ஆட்டோ டிரைவரை செருப்பால் தாக்கிய பெண்: வைரல் வீடியோ

இளம்பெண் ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது ஒரு ஆட்டோ உரசியது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு பெல்லந்தூரில் உள்ள தனியார் ஓட்டல் அருகே இளம்பெண் ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது ஒரு ஆட்டோ உரசியது. இதில் கோபம் அடைந்த அந்த பெண், ஆட்டோ டிரைவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். அப்போது தகராறு முற்றியதில் கோபம் அடைந்த இளம்பெண் ஆட்டோ டிரைவரை செருப்பால் தாக்கினார்.
மேலும் இந்தி மொழியில் திட்டியதாக கூறப்படுகிறது. இதை ஆட்டோ டிரைவர் தனது செல்போனில் படம் பிடித்தார். மேலும் இந்த வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். தற்போது அந்த வீடியோ வைரலாகி பேசு பொருளாக மாறியுள்ளது. அதாவது வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் பெங்களூருவில் தங்கியிருப்பதுடன் கன்னடர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் இந்த சம்பவத்திற்கு பொதுமக்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே ஆட்டோ டிரைவர் கொடுத்த புகாரின்பேரில் பெல்லந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






