ஸ்கூட்டர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு

ஸ்கூட்டர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த பெண் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
ஸ்கூட்டர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு
Published on

பெங்களூரு:

ஸ்கூட்டர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த பெண் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

ஸ்கூட்டர் மீது மோதிய பஸ்

பெங்களூரு காயத்ரிநகரில் வசித்து வந்தவர் உமாதேவி (வயது 42). இவரது மகள் வனிதா (22). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் காலை ராஜாஜிநகர் வாட்டாள் நாகராஜ் ரோட்டில் உள்ள வணிக வளாகம் முன்பு ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்தனர். ஸ்கூட்டரை வனிதா ஓட்டினார். உமாதேவி பின்னால் அமர்ந்து இருந்தார். இந்த நிலையில் சாலை பள்ளத்தில் ஸ்கூட்டர் இறங்கி விடக்கூடாது என்பதற்காக வனிதா பிரேக் பிடித்து ஸ்கூட்டரை திருப்பினார்.

அப்போது பின்னால் வந்த அரசு பஸ், ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த உமாதேவி மீது அரசு பஸ் சக்கரம் ஏறி, இறங்கியது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய உமாதேவி ராஜாஜிநகரில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்ட உமாதேவிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

பெண் சாவு

ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை உமாதேவி உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக எம்.எஸ்.ராமையா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வனிதா அளித்த புகாரின்பேரில் மல்லேசுவரம் போக்குவரத்து போலீசார் அரசு பஸ் டிரைவரான மாருதியை கைது செய்து உள்ளனர்.

இந்த நிலையில் உயிரிழந்த உமாதேவியின் மகள் வனிதா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'நானும், அம்மாவும் (உமாதேவி) ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்தோம். அப்போது பின்னால் வந்த அரசு பஸ், ஸ்கூட்டர் மீது மோதியது. இதனால் அந்த சாலையில் இருந்த பள்ளத்தில் நான் விழுந்தேன். அம்மா மீது பஸ் சக்கரம் ஏறியது. நான் மெதுவாக தான் ஸ்கூட்டரில் சென்றேன். பள்ளம் உள்ளது என்பதற்காக நான் ஸ்கூட்டரை மெதுவாக ஓட்டி செல்லவில்லை. இன்று தாயை இழந்து நிற்கிறேன். என்னை போன்று நிலை யாருக்கும் வர கூடாது' என்றார்.

இதற்கிடையே விபத்து குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

விசாரணைக்கு உத்தரவு

ஸ்கூட்டரில் சென்ற பெண் சாலை பள்ளத்தை தவிர்க்க முயன்றபோது, பின்னால் வந்த அரசு பஸ் மோதி படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

அந்த அறிக்கையின்படி, விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து மாநகராட்சி கமிஷனரிடம் விவாதிக்கப்பட்டுள்ளது. சாலை பள்ளங்களை சீரமைக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com