வீட்டு வேலை செய்வதாக கூறி நுழைந்த பெண்... முதியவருக்கு மயக்க மருந்து கொடுத்து கொலை - குஜராத்தில் பயங்கரம்

லதாபென் கொடுத்த லஸ்ஸியை குடித்த அப்துல்பாயும், அவரது மனைவியும் சிறிது நேரத்தில் மயக்கமடைந்தனர்.
வீட்டு வேலை செய்வதாக கூறி நுழைந்த பெண்... முதியவருக்கு மயக்க மருந்து கொடுத்து கொலை - குஜராத்தில் பயங்கரம்
Published on

காந்திநகர்,

குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியில் உள்ள தரியாபூர் பகுதியில் 81 வயதான அப்துல்பாய் இஸ்மாயில் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று அப்துல்பாய் வீட்டிற்கு வந்த லதாபென்(வயது 55) என்ற பெண், தனக்கு வேலை வேண்டும் எனவும், சமையல் மற்றும் வீட்டு வேலைகளை செய்து கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

அந்த பெண்ணை நம்பி அப்துல்பாய் அவரை வீட்டுற்குள் நுழையவிட்டுள்ளார். வீட்டுற்குள் நுழைந்த லதாபென், வீட்டு வேலைகளை செய்வதுபோல் நடித்துள்ளார். சிறிது நேரம் கழித்து, வீட்டில் இருந்த முதியவர்கள் இருவருக்கும் அவர் லஸ்ஸி போட்டுக் கொடுத்துள்ளார். அதில் மயக்க மருந்தை லதாபென் கலந்துள்ளார்.

அந்த லஸ்ஸியை குடித்த அப்துல்பாயும், அவரது மனைவியும் சிறிது நேரத்தில் மயக்கமடைந்தனர். இதையடுத்து வீட்டில் இருந்த பணம், நகைகள் உள்ளிட்டவற்றை திருடிக்கொண்டு லதாபென் அங்கிருந்து தப்பியோடினார். மயக்கமடைந்து கிடந்த முதியவர்கள் இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

முதியவர் அப்துல்பாய்க்கு ஏற்கனவே பல்வேறு உடல்நல பிரச்சினைகள் இருந்து வந்த நிலையில், மயக்க மருந்தை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால், அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி மருத்துவமனைவியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து குற்றவாளி லதாபென்னை தேடிப்பிடித்து அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் மீது ஏற்கனவே திருட்டு, சட்டவிரோத சூதாட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் தொடர்பான வழக்குகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது.

மேலும், தனியாக வசித்து வரும் முதியவர்களை குறிவைத்து பணம், நகை உள்ளிட்டவற்றை திருடுவதை அவர் வாடிக்கையாக கொண்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர். லதாபென் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com