8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கணவன்; இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் கண்டுபிடித்த பெண்

ஜிதேந்தர் வேறொருபெண்ணை 2வது திருமணம் செய்துகொண்டதும் தெரியவந்தது
8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கணவன்; இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் கண்டுபிடித்த பெண்
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ஹர்டொய் மாவட்டம் முரார்நகரை சேர்ந்தவர் ஷிலூ. இவருக்கும் ஜிதேந்தர் என்பவருக்கும் கடந்த 2018ம் திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணமான சில மாதங்களில் கர்ப்பிணி மனைவி ஷிலூவை கைவிட்டு ஜிதேந்தர் தலைமறைவானார்.

இதையடுத்து, தலைமறைவான ஜிதேந்தர் குறித்து அவரின் தந்தை போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், தீவிர விசாரணைக்குப்பின்னும் ஜிதேந்தர் எங்கு சென்றார் என்பது குறித்து விவரம் தெரியவில்லை. இதனால், விசாரணை, தேடுதல் பணியை போலீசார் கைவிட்டனர். இதனால், ஷிலூ கணவர் வீட்டில் இருந்து வெளியேறி தனது தாயார் வீட்டில் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் கணவர் ஜிதேந்தரை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் ஷிலூ கண்டுபிடித்துள்ளார். ஷிலூ தனது செல்போனில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்துகொண்டிருந்தபோது அதில் தனது கணவர் வேறொரு பெண்ணுடன் ரீல்ஸ் வீடியோ பதிவிட்டிருந்ததை கண்டுபிடித்தார்.

உடனடியாக இது குறித்து ஷிலூ போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது, ஜிதேந்தர் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வசித்து வருவதும் அங்கு வேறொரு பெண்ணை 2வது திருமணம் செய்துகொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து, பஞ்சாப் சென்ற உத்தரபிரதேச போலீசார் ஜிதேந்தரை கைது செய்தனர். பெண்ணை திருமணம் செய்துவிட்டு அவரை ஏமாற்றி தலைமறைவாகி 2வது திருமணம் செய்தது உள்பட பல்வேறு குற்ற பிரிவுகளில் ஜிதேந்தரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com