

பாலியா,
உத்தரபிரதேச மாநிலம் பாலியாவில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூட்டத்தில் கலந்துக்கொண்ட பெண்ணை வலுக்கட்டாயமாக புர்காவை நீக்கச்செய்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.
மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நிலையில் யோகி ஆதித்யநாத் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். பாலியாவில் நடைபெற்ற பா.ஜனதா கூட்டத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்துக் கொள்வதற்கு முன்னதாக பெண்ணை புர்காவை நீக்க செய்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாக பரவியது. புர்காவை நீக்க செய்யப்பட்ட பெண் சாய்ரா என அடையாளம் காணப்பட்டு உள்ளார். கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசார் சாய்ராவை புர்காவை நீக்குமாறு கேட்டு உள்ளார், பின்னர் அவருடன் சேர்ந்த மற்றவர்களும் வலுக்கட்டாயப்படுத்தி உள்ளனர் என குற்றம் சாட்டப்படுகிறது.
சாய்ரா பேசுகையில், நான் பாரதீய ஜனதா கட்சியின் தொண்டர், என்னுடைய கிராமத்தில் இருந்து எங்களுடைய பாரம்பரிய உடையை அணிந்துதான் கூட்டத்திற்கு வந்தேன் என்றார். இவ்விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு போலீஸ் உத்தரவிட்டு உள்ளது.
போலீஸ் கண்காணிப்பாளர் அனில் குமார் பேசுகையில், வீடியோ காட்சிகள் பெறப்பட்டு உள்ளது, இதுதொடர்பாக துறை ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது, என்றார். மீரட்டில் மூன்று நாட்களுக்கு முன்னதாக யோகி ஆதித்யநாத் பிரசாரத்திற்கு சென்ற போது கருப்பு கொடி காட்டப்பட்டது. இதனையடுத்து கருப்பு கொடி காட்டியவருடன் பாரதீய ஜனதா தொண்டர்கள் மோதலில் ஈடுபட்டார்கள். இந்நிலையில் இந்த கூட்டத்தில் கருப்பு கொடி காட்டப்படக்கூடாது என அறிவுறுத்தப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
மாவட்ட மாஜிஸ்திரேட் சுரேந்திர விக்ராம் பேசுகையில், இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது, குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும், என கூறிஉள்ளார்.