மருத்துவமனையில் ஆள் இல்லாததால் நள்ளிரவில் வாகன நிறுத்துமிடத்தில் பெண்ணுக்கு பிரசவம் - அரியானாவில் அதிர்ச்சி சம்பவம்

உறவினர்கள் நீண்ட நேரமாக வாசலில் நின்று அழைத்தும் மருத்துவ ஊழியர்கள் யாரும் வெளியே வந்து பார்க்கவில்லை.
மருத்துவமனையில் ஆள் இல்லாததால் நள்ளிரவில் வாகன நிறுத்துமிடத்தில் பெண்ணுக்கு பிரசவம் - அரியானாவில் அதிர்ச்சி சம்பவம்
Published on

சண்டிகர்,

அரியானா மாநிலம் படோலி கிராமத்தை சேர்ந்த பலேஷ் என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு நேற்று நள்ளிரவு 1 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, பெண்ணின் குடும்பத்தினர் அவரை பரிதாப்பாத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனையின் வாசற்கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. கர்ப்பிணி பெண் பிரவச வலியில் துடித்துக் கொண்டிருந்த நிலையில், அவரது உறவினர்கள் நீண்ட நேரமாக வாசலில் நின்று அழைத்தும் மருத்துவ ஊழியர்கள் யாரும் வெளியே வந்து பார்க்கவில்லை.

இதையடுத்து, மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள மற்றொரு நுழைவாயில் வழியாக அவர்கள் மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்துள்ளனர். இதற்குள் அந்த பெண்ணுக்கு பிரசவ வலி அதிகமாகிவிட்டது. மருத்துவ நிர்வாகத்தின் உதவியும் கிடைக்கவில்லை என்பதால், மருத்துவமனையில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் வைத்தே, அந்த பெண்ணின் உறவினர்கள் சேர்ந்து, செல்போன் டார்ச்லைட் உதவியோடு அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர்.

பிரசவம் நல்லபடியாக முடிந்து அந்த பெண்ணுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இதற்கிடையில் மருத்துவ ஊழியர்கள் சிலர் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் தாயையும், குழந்தையையும் மருத்துவமனைக்குள் கொண்டு சென்று தேவையான சிகிச்சைகளை வழங்கினர். தற்போது இருவரின் உடல்நிலையும் சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் பரவியதையடுத்து, இது குறித்து துறை ரீதியான விசாரணை நடத்துவதற்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com