

லக்னோ,
உத்தர பிரதேசம் மொராதாபாத் பகுதியில் அரிய மருத்துவ நிகழ்வு ஒன்று டாக்டர்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சம்பல் பகுதியைச் சேர்ந்த 31 வயதான அமீனா என்ற பெண், 5 நாட்கள் இடைவெளியில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். அதிலும் அனைத்து குழந்தைகளும் அறுவை சிகிச்சையின்றி சுகப்பிரசவம் மூலம் பிறந்துள்ளது.
தகவலின்படி, அமீனாவுக்கு கடந்த மே 9-ம் தேதி முதல் குழந்தை பிறந்துள்ளது. அதன்பின் தொடர்ந்து டாக்டர்களின் கண்காணிப்பில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தநிலையில், மீதமுள்ள மூன்று குழந்தைகளும் மே 14ம் தேதி பிறந்துள்ளன. பொதுவாக நான்கு குழந்தைகள் கர்ப்பமாக இருக்கும் சூழலில் சிசேரியன் முறையே தேர்வு செய்யப்படும் நிலையில், இந்தப் பிரசவம் முழுவதும் இயல்பான முறையில் நடந்தது டாக்டர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், கர்ப்ப காலம் ஆரம்பத்திலிருந்தே சவாலாக இருந்ததாக தெரிவித்துள்ளனர். அமீனாவுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் கல்லீரல் தொடர்பான பிரச்சினைகளும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்தே சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து மருத்துவக் குழு சரியான நேரத்தில் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக தாயும் குழந்தைகளும் பாதுகாப்பாக காப்பாற்றப்பட்டனர். மேலும் நான்கு குழந்தைகளும் தனித்தனி பனிக்குடங்களில் வளர்ந்திருந்தது இந்த வழக்கின் முக்கிய அம்சமாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய அதிக ஆபத்துகள் நிறைந்த கர்ப்ப நிலையிலும், டாக்டர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டதே இந்த வெற்றிக்குக் காரணம் என கூறப்படுகிறது. இது மிகவும் சவாலான பிரசவம் என்றாலும் தாயும் குழந்தைகளும் நலமுடன் உள்ளனர்.