கணவருடன் தகராறு: 2 குழந்தைகளை கிணற்றில் வீசிய பெண் - ஒரு குழந்தை பலி

2 குழந்தைகளும் கிணற்றில் விழுந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக அங்கு திரண்டனர்.
ஒரு குழந்தை பலி
கணவருடன் தகராறு
Published on

மங்களூரு,

கர்நாடகாவில் கணவருடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, தனது 3½ வயது மகன் மற்றும் கணவரின் சகோதரரின் 3 வயது மகனை கிணற்றில் வீசியதாக இளம் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெர்னே கிராமத்தை சேர்ந்தவர் நூருன்னிசா (வயது 28) என்பவருக்கும், அவரது கணவருக்கும் செல்போனில் பேசி கொண்டிருந்த போதே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தகராறுக்கு பிறகு விபரீதம்

கணவருடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த நூருன்னிசா, தனது 3½ வயது மகனையும், கணவரின் சகோதரரின் 3 வயது மகனையும் வீட்டின் அருகே இருந்த கிணற்றில் தூக்கி வீசியதாக போலீசார் தெரிவித்தனர்.

குழந்தைகளை மீட்ட பொதுமக்கள்

2 குழந்தைகளும் கிணற்றில் விழுந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக அங்கு திரண்டனர். பின்னர், துரிதமாக செயல்பட்டு 2 குழந்தைகளையும் கிணற்றில் இருந்து மீட்டனர். ஆனால், மீட்கப்பட்ட சிறிது நேரத்தில் நூருன்னிசாவின் கணவரின் சகோதரரின் 3 வயது மகன் உயிரிழந்தது தெரியவந்தது.

மற்றொரு குழந்தைக்கு சிகிச்சை

நூருன்னிசாவின் 3½ வயது மகன் உயிருக்கு போராடிய நிலையில், உடனடியாக மங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக உப்பினங்கடி போலீசார் வழக்குப்பதிவு செய்து நூருன்னிசாவை கைது செய்தனர். குழந்தைகளை கிணற்றில் வீசியதற்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com