

பெங்களூரு,
கர்நாடக மாநிலம் ஹாசன் தாலுகா முக்கந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கும் அரக்கல்கோடு தாலுகா முண்டகோடு கிராமத்தை சேர்ந்த ஹர்ஷிதா என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 7 வயதில் மகன் உள்ளான். ஹர்ஷிதாவுக்கும், அதேப்பகுதியை சேர்ந்த சச்சின் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
இந்த நிலையில் கடந்த மாதம் (மார்ச்) 30-ந்தேதி மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு ஹர்ஷிதா சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரகாசும், அவரது குடும்பத்தினரும் ஹர்ஷிதாவை பல இடங்களில் தேடினார்கள். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர்கள், ஹாசன் புறநகர் போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் ஹர்ஷிதா தனது கள்ளக்காதலன் சச்சினுடன் வீட்டை விட்டு ஓடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஹர்ஷிதாவின் இருப்பிடத்தை கண்டறிந்து அவரை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர். அப்போது போலீஸ் நிலையத்தில் வைத்து பிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர், போலீசார் ஹர்ஷித வுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர், நான் கணவருடன் செல்ல மாட்டேன் என்றும், காதலன் சச்சினுடன் தான் செல்வேன் என்றும் பிடிவாதமாக கூறி உள்ளார். பின்னர் ஹர்ஷிதாவின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அவரிடம் கெஞ்சினர். இதனால் மனம்மாறிய அவர், கணவருடன் செல்ல சம்மதித்தார். இதையடுத்து போலீசார் ஹர்ஷிதாவிடம் சமாதானம் பேசி கணவருடன் அனுப்பி வைத்தனர். பிரகாசும் அவரை அழைத்து சென்றுள்ளார்.
இந்த நிலையில் போலீசார் சமாதானம் பேசி கணவருடன் அனுப்பி வைத்த நிலையில், மறுநாளே ஹர்ஷிதா தனது கள்ளக்காதலன் சச்சினுடன் மீண்டும் வீட்டை விட்டு ஓடி உள்ளார். இதற்கிடையே 2-வது முறையாக ஓடிய ஹர்ஷிதா, காதலன் சச்சினுடன் காரில் இருந்தபடியே மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.