பெண்ணை அறைந்த விவகாரம்: கர்நாடக மந்திரிக்கு எதிராக நூற்றுக்கணக்கான காங்கிரசார் போராட்டம்

பெண்ணை அறைந்த விவகாரத்தில் கர்நாடக மந்திரிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான காங்கிரசார் கைது செய்யப்பட்டனர்.
பெண்ணை அறைந்த விவகாரம்: கர்நாடக மந்திரிக்கு எதிராக நூற்றுக்கணக்கான காங்கிரசார் போராட்டம்
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா ஹங்கலா கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் மனு கொடுக்க வந்த பெண் ஒருவரை மந்திரி சோமண்ணா கன்னத்தில் அறைந்தது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதனை தொடர்ந்து, மந்திரி சோமண்ணாவுக்கு எதிராக பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், கர்நாடக மந்திரிக்கு எதிராக பெங்களூருவில் நூற்றுக்கணக்கான காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சோமண்ணாவை மந்திரி பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பியபடியும், போஸ்டர்களை சுமந்தபடியும், மகளிரணி உள்ளிட்ட காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன்பின் அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.

பெண்ணை கன்னத்தில் அறைந்த விவகாரம் தொடர்பாக மந்திரி சோமண்ணா, சாம்ராஜ்நகரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களுக்கு நில உரிமை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நான் தவறாக நடந்துகொள்ளவில்லை. யார் மனதும் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நிகழ்ச்சி நடக்கும்போது அந்த பெண் பலமுறை மேடைக்கு வந்தார். நிகழ்ச்சி முடிந்தவுடன் பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறினேன். நான் அவரை ஒதுங்கி நிற்க வைக்க முயன்றேன்.

வேறு எதுவும் நான் செய்யவில்லை. நான் 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். பெண்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நானும் பொருளாதார ரீதியில் நலிவடைந்த குடும்பத்தில் இருந்து வந்தவன் தான் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com