

ஜக்தல்பூர்,
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தனது முன்னாள் காதலன் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய இருந்தபோது, அவர் மீது ஆசிட் வீசிய 22 வயது பெண்ணை போலீசார் நேற்று கைது செய்தனர்.
முன்னதாக பன்புரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோட்டே அமபால் கிராமத்தில் கடந்த 19-ந்தேதி அன்று தம்ருதர் பாகேல் (வயது 25) என்பவருக்கு திருமணம் நடைபெற்றது. அப்போது அடையாளம் தெரியாத ஒருவர் ஆசிட் வீசியதில் மணமகன், மணமகள் மற்றும் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட 10 பேருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது.
மாலை நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததாலும் அந்த நேரத்தில் மின்சாரம் தடைபட்டதாலும் குற்றவாளியை அருகில் இருந்த யாரும் பார்க்கவில்லை. இதையடுத்து போலீசார் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 326 ஏ (ஆசிட் பயன்படுத்துவதன் மூலம் தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்துதல்) கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
விசாரணையில் மணமகனின் முன்னாள் காதலி இதைச் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் தனக்கும் தம்ருதர் பாகேலுக்கும் கடந்த பல வருடங்களாக உறவு இருப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில் தம்ருதர் தன்னை ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருப்பது குறித்து தெரிந்ததும் அவர் மீது ஆசிட் வீச திட்டமிட்டதாக தெரிவித்தார்.
இதற்காக அந்தப் பெண், அவர் வேலை செய்யும் மிளகாய்ப் பண்ணையில் இருந்து ஆசிட்டைத் திருடியுள்ளார். பின்னர் திருமண நிகழ்வில் ஆண் வேடமிட்டு வந்து தன்னுடைய முன்னாள் காதலன் மீது ஆசிட் வீசியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.