வேறு சாதி நபரை திருமணம் செய்த பெண்... வீட்டிற்கு அழைத்து வந்து கழுத்தை நெரித்துக் கொன்ற சகோதரன்

ஹோலி பண்டிகையை கொண்டாட வீட்டிற்கு வருமாறு கூறி சுஜாதாவை அவரது தாய் அழைத்துச் சென்றுள்ளார்.
வேறு சாதி நபரை திருமணம் செய்த பெண்... வீட்டிற்கு அழைத்து வந்து கழுத்தை நெரித்துக் கொன்ற சகோதரன்
Published on

பாட்னா,

வேறு சாதியை சேர்ந்த நபரை திருமணம் செய்ததால், இளம்பெண் ஒருவர் தனது சகோதரனால் ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் காவல்துறையினர் அலட்சியமாக செயல்பட்டதாக உயிரிழந்த பெண்ணின் கணவர் குற்றம்சாட்டியுள்ளார்.

காதல் திருமணம்

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கர் குமார்(வயது 22). இவரும், சுஜாதா குமாரி(வயது 19) என்ற பெண்ணும் பள்ளிப்பருவத்தில் இருந்தே ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். சுமார் 6 வருடங்கள் காதலர்களாக இருந்த இவர்கள், திருமணம் செய்துகொண்டு தம்பதியாக வாழ விரும்பினர்.

இதன்படி, கடந்த ஜனவரி மாதம் 18-ந்தேதி சுஜாதாவும், சங்கர் குமாரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, சமஸ்திப்பூரில் உள்ள நண்பர் வீட்டிற்கு சென்றனர். அங்கு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து அரியானா மாநிலத்திற்கு சென்ற சங்கர்-சுஜாதா ஜோடி, அங்கு ஒரு வீட்டில் வாடகைக்கு குடியேறி கணவன்-மனைவியாக வாழத் தொடங்கினர்.

கோர்ட்டில் ஆஜர்

இதனிடையே சுஜாதாவின் குடும்பத்தினர் முசாபர்பூர் காவல் நிலையத்தில் தங்கள் மகளை சங்கர் குமார் கடத்திச் சென்றுவிட்டார் என புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், அரியானாவில் வசித்து வந்த சங்கர்-சுஜாதா ஜோடியை தேடி கண்டறிந்து முசாபர்பூருக்கு அழைத்து வந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அப்போது நீதிபதியிடம் சுஜாதா, தான் ஒரு மேஜர் என்றும், முழு சம்மதத்துடன் சங்கரை திருமணம் செய்து கொண்டதாகவும், அவருடனேயே வாழ விரும்புவதாகவும் கூறினார். இருப்பினும் சங்கர் குமாரை சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இளம்பெண் சுஜாதாவை காவல்துறையினர் அவரது அத்தை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையின் அலட்சியம்

சிறையில் அடைக்கப்பட்ட சங்கர் குமாரிடம், ‘சிறையை விட்டு வெளியே சென்றதும் உன் மனைவியுடன் நீ சேர்ந்து வாழலாம்’ என்று அங்கிருந்த போலீசார் கூறியுள்ளனர். இதனை நம்பி சங்கர் குமார் சிறையில் நம்பிக்கையுடன் இருந்து வந்துள்ளார். இறுதியாக கடந்த மார்ச் 31-ந்தேதி சிறையில் இருந்து விடுதலையான சங்கர் குமார், தனது மனைவி சுஜாதாவிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். அதன் பிறகு அவரால் சுஜாதாவை தொடர்பு கொள்ள முடியவில்லை.

சுஜாதாவின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் அங்கு இல்லை. தனது மனைவியின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகித்த சங்கர் குமார், காவல்நிலையத்திற்கு சென்று சுஜாதாவை கண்டுபிடித்து தருமாறு பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளார். ஆனால் இது குறித்து காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சங்கர் குமார், சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், தனது மனைவி காணாமல் போனது குறித்தும், காவல்துறையின் அலட்சியம் குறித்தும் பேசிய அவர், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறியிருந்தார். அவர் வெளியிட்ட வீடியோ வைரலாக பரவிய நிலையில், மாவட்ட டி.எஸ்.பி. உத்தரவின்பேரில் முசாபர்பூர் காவல்துறையினர் உடனடியாக இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த தொடங்கினர்.

ஆணவக்கொலை

இந்த விசாரணையின்போது சுஜாதாவின் சகோதரர் அபிஷேக் குமார் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், தனது சகோதரி சுஜாதாவை கழுத்தை நெரித்து கொலை செய்து, பின்னர் உடலை எரித்துவிட்டதாக அபிஷேக் குமார் ஒப்புக்கொண்டார். வேறு சாதியைச் சேர்ந்த நபரை திருமணம் செய்ததால் ஏற்பட்ட ஆத்திரம் காரணமாக தனது சகோதரியை கொலை செய்ததாக அவர் போலீசாரிடம் கூறினார்.

சங்கர் குமார் சிறையில் இருந்த சமயத்தில் சுஜாதா அவர் அத்தை வீட்டில் இருந்தார். அப்போது சுஜாதாவின் தாய் அங்கு சென்று, ஹோலி பண்டிகையை கொண்டாட வீட்டிற்கு வருமாறு கூறி சுஜாதாவை அழைத்துச் சென்றுள்ளார். வீட்டிற்கு வந்த சுஜாதாவை அவரது சகோதரர் கொலை செய்த நிலையில், குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து சுஜாதாவின் உடலை எரித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் சங்கர் குமார் வெளியிட்ட வீடியோ வைரலான பிறகே போலீசார் சுஜாதாவை தேடத் தொடங்கியுள்ளனர். அந்த தேடலின் முடிவில் இந்த ஆணவக்கொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த கொலை தொடர்பாக சுஜாதாவின் சகோதர் அபிஷேக் குமாரை கைது செய்த போலீசார், கொலையில் அவரது குடும்பத்தினருக்கு இருக்கும் தொடர்பு குறித்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com