

மும்பை,
மராட்டிய மாநிலம், தானே மாவட்டம் கல்யாண் டோம்பிவ்லி மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட கம்பல்படா குப்பைக் கிடங்கு உள்ளது. இங்கு குப்பைகளை சேகரித்து கொண்டு வரும் ஒரு வேனுக்குள் இன்று, சுமார் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலத்தை அங்கு வேலை செய்யும் பணியாளர்கள் சிலர் கண்டனர். இது அவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவர்கள் உடனே டோம்பிவ்லி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த பெண் யார்? கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தபிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும்.
இறந்துபோன பெண்ணை அடையாளம் காணும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக டோம்பிவ்லி உதவி காவல் ஆணையர் சுஹாஸ் ஹெமாடே கூறினார்.