நிதி அதிகாரம் பெற்றிருக்கும் பெண்கள், சமுதாய தீமைகளுக்கு எதிரான அரணாக திகழ்வார்கள் பிரதமர் பேச்சு

நிதி அதிகாரம் பெற்றிருக்கும் பெண்கள் சமுதாய தீமைகளுக்கு எதிரான அரணாக திகழ்வார்கள் என பிரதமர் மோடி கூறினார்.
நிதி அதிகாரம் பெற்றிருக்கும் பெண்கள், சமுதாய தீமைகளுக்கு எதிரான அரணாக திகழ்வார்கள் பிரதமர் பேச்சு
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் செயல்பட்டு வரும் பல்வேறு சுயஉதவிக்குழுவை சேர்ந்த பெண்களுடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார். நரேந்திர மோடி செயலி வழியாக நடந்த இந்த நிகழ்ச்சியில், 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் கலந்துகொண்டு, சுயஉதவிக்குழு மூலம் பெற்றுக்கொண்ட நன்மைகள் மற்றும் வளங்களை பிரதமரிடம் எடுத்துரைத்தனர்.

அப்போது கிராமப்புற மேம்பாட்டுக்காக உழைத்து வரும் சுயஉதவிக்குழு உறுப்பினர்களை பிரதமர் பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றும்போது அவர் கூறியதாவது:

2014ம் ஆண்டில் இருந்து முன்னுரிமை அடிப்படையில் 20 லட்சம் சுயஉதவிக்குழுக்களை அரசு உருவாக்கி இருக்கிறது. அத்துடன் 2.25 கோடி குடும்பங்கள் இதில் இணைக்கப்பட்டு உள்ளன. மொத்தத்தில் 5 கோடி பெண்களுடன் 45 லட்சம் சுயஉதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.

இதன் மூலம் கிராமப்புறங்களில் உள்ள இந்த 5 கோடி குடும்பங்களுக்கு வருவாய் ஈட்டும் ஒரு நபர் கூடுதலாக கிடைத்துள்ளார். கிராமப்புற பொருளாதாரத்துக்கு முக்கியமாக திகழும் விவசாயம் மற்றும் கால்நடைத்துறையை பெண்களின் பங்களிப்பு இல்லாமல் நடத்த முடியாது.

கிராமப்புறங்களில் பொருளாதார வளர்ச்சிக்கான அடித்தளத்தை பெண்கள் சுயஉதவிக்குழுக்கள் அமைக்கின்றன. நாட்டில் வசித்து வரும் மகளிரால் சமூக மாற்றம் சாத்தியப்படும்.

பெண்களுக்கான அதிகாரமளித்தலில், நிதி சுதந்திரம் மிகவும் தேவை. நிதி சுதந்திரமே ஒரு பெண்ணை உறுதியானவளாகவும், அதிகாரம் மிக்கவளாகவும் உருவாக்குகிறது. நிதி ரீதியான அதிகாரம் பெற்ற பெண்கள், சமுதாய தீமைகளுக்கு எதிரான அரணாக திகழ்வார்கள்.

பெண்கள் மிகுந்த ஆர்வம் மிக்கவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய தேவை இல்லை. அவர்கள் செயல்படுவதற்கான வாய்ப்புகளை மட்டும் வழங்கினால் போதும். அவர்களது திறமைகளை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com