

திருவனந்தபுரம்,
கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி(UDF), சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், கேரள அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான(KSRTC) பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் வழங்கப்படும் என கடந்த மார்ச் மாதம் உறுதியளித்தது. இது 'பிரியதர்ஷினி’ என்ற திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கேரளாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து கேரளாவில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை வழங்க மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் வருகிற 15-ந்தேதி(நாளை மறுதினம்) முதல் கேரள அரசு பேருந்துகளில் அமல்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில், ‘பிரியதர்ஷினி’ திட்டத்தின் கீழ் வரும் 15-ந்தேதி முதல் 7 வகையான பேருந்துகளில் பெண்கள் மற்றும் திருநங்கைகள் இலவசமாக பயணம் செய்யலாம் என கே.எஸ்.ஆர்.டி.சி தெரிவித்துள்ளார். இதன்படி சாதாரண அரசு பேருந்து, நகர பேருந்து, நிறுத்தங்கள் வரையறுக்கப்பட்ட சாதாரண அரசு பேருந்து, சீர்நிலை சாதாரண அரசு பேருந்து, டவுன் டூ டவுன் பேருந்து, பாயிண்ட் டூ பாயிண்ட் பேருந்து மற்றும் கிராமவாண்டி சேவைகள் ஆகிய பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.