

பெங்களூரு:
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட 5 வாக்குறுதிகளை அளித்துள்ளது. முதல் வாக்குறுதியாக பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணம் செல்லும் 'சக்தி' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. குளிர்சாதன மற்றும் படுக்கை வசதி கொண்ட பஸ்களை தவிர அனைத்து பகுதிகளிலும் பெண் இலவசமாக பயணிக்கலாம். பி.எம்.டி.சி., கே.எஸ்.ஆர்.டி.சி. உள்பட 4 போக்குவரத்து மண்டல பஸ்களிலும் பெண்கள் இலவசமாக பயணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சக்தி திட்டம் அமலுக்கு வந்த பிறகு இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலா தலங்கள், கோவில்களுக்கு படையெடுத்து செல்ல பெண்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக நேற்று பெங்களூருவில் உள்ள டிக்கெட் கவுண்டர்களில் கூட்டம் அலை மோதியது. மைசூரு, தர்மஸ்தலா, மலை மாதேஸ்வரா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல நீண்ட நேரம் காத்திருந்து டிக்கெட் முன்பதிவு செய்தனர். ஒரே நேரத்தில் பலர் கே.எஸ்.ஆர்.டி.சி. இணையதளத்தில் டிக்கெட் பதிவு செய்ததால் இணையதளம் சிறிது நேரம் முடங்கியது.
பயணிகள் கூட்டம் அதிகரித்ததால் பெங்களூரு சாட்டிலைட் பஸ் நிலையத்தில் இருந்து மைசூரு, மலை மாதேஸ்வரா கோவிலுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன. சாம்ராநகர் மாவட்டம் கொள்ளேகாலில் இருந்து மலை மாதேஸ்வரா கோவிலுக்கு சென்ற அரசு பஸ்சில் பெண்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் அந்த பஸ்சின் பின்பக்க கதவு உடைந்து போனது.