இரவு 10 மணிக்கு கூட பெண்கள் பாதுகாப்பை உணர வேண்டும்: டெல்லி போலீசாருக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்

உங்களை பார்த்து மக்கள் ஓடி ஒளிய கூடாது. உங்களை சந்தித்து பேச வேண்டும்.
இரவு 10 மணிக்கு கூட பெண்கள் பாதுகாப்பை உணர வேண்டும்:  டெல்லி போலீசாருக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்
Published on: 

புதுடெல்லி

இரவு பத்து மணிக்கு கூட பெண்கள் பாதுகாப்பை உணர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு டெல்லி போலீசாருக்கு அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.

டெல்லியில் கடந்த செப்டம்பர் 21-ந்தேதி ஆஸ்தா கஞ்ச் பூங்காவில் 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரவலாக அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்களும், எதிர்ப்புகளும் வலுத்துள்ளன.

இந்நிலையில், டெல்லியில் அதிகரித்து வரும் பலாத்கார சம்பவங்கள் தொடர்பான மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு விசாரணை ஒன்று நடந்தது. நீதிபதிகள் பர்திவாலா மற்றும் வினோத் சந்திரன் தலைமையிலான அமர்வு மேற்கொண்ட விசாரணையில், டெல்லி போலீசாருக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தனர்.

செயலில் இறங்க வேண்டும்

இதன்படி, வழிகாட்டு நெறிமுறைகளோ மற்றும் உத்தரவுகளோ ஏட்டளவில் இருப்பது உதவாது. நீங்கள் செயலிலும் இறங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது என்றனர். பூங்காக்கள், சாலைகள், பேருந்து நிலையங்கள், மெட்ரோ நிலையங்கள் மற்றும் பிற இடங்கள் உள்பட பொது இடங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாதுகாப்பற்ற பகுதிகள் கண்டறியப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.

பெண்கள் நடந்து சென்றாலும், டூ வீலரில் சென்றாலும், மெட்ரோவில் சென்றாலும் அவர்கள் பாதுகாப்பை உணர வேண்டும். இரவு பத்து மணிக்கு கூட பெண்கள் பாதுகாப்பை உணர வேண்டும். டெல்லியில் நடமாட பெண்கள் பயப்படக்கூடாது என்றனர்.

என்ன நடவடிக்கை?

தொடர்ந்து அவர்கள், குற்றங்களை போலீசார் முன்கூட்டியே தடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்து முடிந்த பிறகு நடவடிக்கை எடுப்பதில் பலன் இருப்பதாக தெரியவில்லை என கூறிய நீதிபதிகள், குற்றங்களை தடுப்பதற்கு டெல்லி காவல் துறை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? என்றும் கேள்வி எழுப்பினர்.

ரோந்து பணி

பாலியல் குற்றவாளிகளுக்கு பயத்தை உருவாக்குங்கள் என்றும் நீதிபதிகள் போலீசாரை அறிவுறுத்தினர். பண்டிகை கால கொண்டாட்டங்கள் அதிகம் வரவுள்ள சூழலில், இரவு பகலாக ரோந்து பணியை அதிகரியுங்கள். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மனதில் பயத்தை போலீசார் உருவாக்க வேண்டும்.

உங்களை பார்த்து மக்கள் ஓடி ஒளிய கூடாது. உங்களை சந்தித்து பேச வேண்டும். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உங்களுடைய பதில் நடவடிக்கை அமைய வேண்டும் என தெரிவித்தனர். போலீசாரின் முன் மிகப்பெரிய பணி உள்ளது என கூறி வழக்கு விசாரணையை நவம்பர் 16-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com