வரதட்சணை தொடர்பான நர்சிங் பாடப்புத்தகம்; உடனடி நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் கடிதம்

இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவும், ஏழு நாட்களுக்குள் ஆணையத்திடம் தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
வரதட்சணை தொடர்பான நர்சிங் பாடப்புத்தகம்; உடனடி நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் கடிதம்
Published on

புதுடெல்லி,

கல்லூரி பயிலும் மாணவர்களின் பாடப் புத்தகம் ஒன்றில் வரதட்சணையால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பயன்கள் என்ற பகுதி பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது அதிர்ச்சியடைய செய்தது. நர்சிங் பயிலும் மாணவிகளின் சமூகவியல் பாட புத்தகத்தில் இந்த பகுதி இடம் பெற்றுள்ளது.

இதனை போட்டோவாக எடுத்து அபர்ணா என்பவர் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.அந்த பதிவை பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்து, இத்தகைய பாடம் மாணவர்களுக்கு கற்பிக்கப்படக் கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

அந்த புத்தகத்தின் ஆசிரியர் டி கே இந்திராணி என்பவர் ஆவார். இந்த பாடப்புத்தகம் இந்திய நர்சிங் கவுன்சில் பாடத்திட்டத்தின்படி நர்சிங் பயிலும் மாணவர்களுக்கானது.

அந்த பாடபுத்தகத்தின் ஒரு பக்கத்தில், வரதட்சணையால் ஏற்படும் நன்மைகள் என்று குறிப்பிடப்பட்டு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதில் கடைசியாக அவர் குறிப்பிட்டுள்ளது தான் ஆச்சரியம். அதில், வரதட்சணை அதிகமாக கொடுத்தால், அசிங்கமாக தோற்றம் கொண்ட பெண்களை நல்ல இடத்தில் அல்லது அழகான ஆண்களுக்கு திருமணம் செய்து கொடுக்க முடியும் என்று ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கருத்துக்கள் சமூகத்தில் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளன.

கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதானிடம், தேசிய மகளிர் ஆணையம் அவர் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்குமாறும்மந்திரி தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

தேசிய மகளிர் ஆணையம் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

வரதட்சணையில் பெற்றோரின் சொத்தில் ஒரு பங்கைப் பெறுவது என்பது பிற்போக்கு நடைமுறையின் தகுதிகளில் ஒன்றாகும் என்னும் பொருள்பட அந்த பாடப்புத்தகம் கூறுகிறது.

வரதட்சணையின் சிறப்புகள் என்ற தலைப்பின் கீழ், டி கே இந்திராணி எழுதியுள்ள, நர்சிங் மாணவிகளுக்கான சமூகவியல் பாடநூலில் இந்த பக்கம் உள்ளது.

அந்த புத்தகத்தின் அட்டையில், இந்திய நர்சிங் கவுன்சிலின் பாடத்திட்டத்தின்படி எழுதப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, 'வரதட்சணை' என்ற அச்சுறுத்தலைப் பற்றி மாணவர்களுக்கு மிகவும் தவறான செய்தியை அனுப்புகிறது.

வரதட்சணை என்பது இந்தியாவில் ஆழமாக வேரூன்றிய சமூகத் தீமையாகும், அதை நேர்மறையாக சித்தரிப்பது பெண்களின் அதிகாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும்.

இந்த விவகாரம் மிகவும் கவலைக்குரியது மற்றும் அதனை ஆணையம் கவனத்தில் எடுத்துள்ளது.

இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷனுக்கும் அந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவும், ஏழு நாட்களுக்குள் ஆணையத்திடம் தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக சிவசேனா கட்சியின் முக்கிய தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான பிரியங்கா சதுர்வேதி,

வரதட்சணையின் சிறப்பை விவரிக்கும் ஒரு பாடநூல், உண்மையில் நமது பாடத்திட்டத்தில் இருப்பது நம் தேசத்திற்கும் அதன் அரசியலமைப்பிற்கும் அவமானம் என்று அவர் கண்டனத்தை பதிவிட்டிருந்தார்.

நேற்று, இந்திய நர்சிங் கவுன்சிலும், சர்ச்சைக்குள்ளான பாடப்புத்தகத்தில் உள்ள "இழிவான உள்ளடக்கத்தை" கண்டித்துள்ளது.

இந்திய நர்சிங் கவுன்சிலின் அறிக்கையில், இந்திய நர்சிங் கவுன்சில் எந்த எழுத்தாளரையோ அல்லது வெளியீட்டையோ அங்கீகரிக்கவில்லை.

எந்தவொரு எழுத்தாளரும் இந்திய நர்சிங் கவுன்சிலின் பெயரை தங்கள் வெளியீடுகளுக்கு பயன்படுத்த அனுமதிக்கவில்லை. இந்திய நர்சிங் கவுன்சில், நர்சிங் பாடத்திட்டத்தை மட்டுமே பரிந்துரைக்கிறது. அதன் இணையதள வெப்சைட்டிலும் பாடத்திட்டம் உள்ளது என்று கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com