

சென்னை,
சட்டமன்ற அமைப்புகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு வழங்கும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கடந்த 2023-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவை 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 2029 பொதுத்தேர்தலுக்கு முன்பாக இந்த சட்டம் அமலுக்கு வருவதை உறுதிசெய்ய முடியும்.
இந்த நிலையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்பது தொகுதி மறுவரையறை விவகாரத்தை திசைதிருப்புவதற்கான முயற்சி என தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது;-
“தமிழகத்தில் இல்லாத கட்சியும், தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் கட்சியுமான பா.ஜ.க., எங்களிடம் இருந்து மரியாதையை எதிர்பார்க்க முடியாது. தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மக்கள் நாளை தங்கள் வீடுகளில் கருப்புக் கொடிகளை ஏற்றுமாறு நாங்கள் கேட்டுக்கொண்டுள்ளோம். மகளிர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா என்ற போர்வையில், தொகுதி மறுவரையறை விவகாரத்தை திசைதிருப்பி தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்க பிரதமர் மோடி முயற்சிக்கிறார்.
ஒரு ஜனநாயக நாட்டை இப்படி ஆள முடியாது. அவர்கள் நமது அதிகாரங்களைப் பறிக்க நினைக்கிறார்கள். நாங்கள் இதை எதிர்த்து வருகிறோம். நாளை இந்த மசோதா நிறைவேறாமல் இருப்பதை உறுதி செய்வோம். எங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த ஏப்ரல் 16 அன்று நாங்கள் கருப்பு உடை அணிவோம்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.