

விஜயவாடா,
மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநிலம் புறக்கணிக்கப்பட்டதும் தெலுங்கு தேசம் மற்றும் பா.ஜனதா இடையே விரிசல் அதிகரித்தது. இன்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திர பாபு நாயுடு தலைமையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது பட்ஜெட் புறக்கணிப்பு மற்றும் கூட்டணி தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது. ஆனால் கூட்டணியில் நீடிப்பதாக தெலுங்கு தேசம் தெரிவித்து உள்ளது. இதற்கிடையே சந்திரபாபு நாயுடு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவிடம் பேசியதாகவும், அமித்ஷா மற்றும் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சந்திரபாபு நாயுடுவிடம் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியது. இவை மறுக்கப்பட்டு உள்ளது.
பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து விலகுவதை நிறுத்திய தெலுங்கு தேசம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க திட்டமிட்டு உள்ளது.
கூட்டம் முடிந்த பின்னர் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் மத்திய மந்திரியுமான ஒய்.எஸ். சவுத்ரி பேசுகையில், ஆந்திர பிரதேசம் தொடர்பான பல்வேறு திட்டங்கள் மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது. நாங்கள் அதனை சரிசெய்ய மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்வோம். அதன்பின்னரும் மத்திய அரசிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை என்றால், கட்சியின் தலைவர் சரியான முடிவை எடுப்பார். அதுவரையில் நாம் காத்திருக்க மற்றும் கண்காணிக்க வேண்டும்,என கூறினார்.
மத்திய பட்ஜெட்டில் ஆந்திராவிற்கு அநீதி இழைக்கப்பட்டதில் மாநில மக்கள் கோபம் கொண்டு உள்ளார்கள். நாங்கள் இதனை பாராளுமன்றத்தில் எதிரொலிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு உள்ளார். இதனை சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியதாகவும் தெரிவித்து உள்ளார்.
பாராளுமன்றத்தில் தெலுங்குதேசம் எம்.பி.க்கள் இப்பிரச்சனையை எழுப்ப சந்திரபாபு நாயுடு கேட்டுக் கொண்டு உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமித்ஷா பேசவில்லை
சிவசேனாவிடம் சந்திரபாபு நாயுடு பேசவில்லை. அமித்ஷா மற்றும் சந்திரபாபு நாயுடு இடையேயும் எந்தஒரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை எனவும் மறுப்பு தெரிவித்து உள்ளார்.