"2028ல் நடக்கும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை" - சித்தராமையா அறிவிப்பு

நேர்மையான அரசியலுக்கு இடமில்லாத நிலை தற்போது உள்ளது என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.
"2028ல் நடக்கும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை" - சித்தராமையா அறிவிப்பு
Published on

பெங்களூரு,

தனக்கு இப்போது 79 வயதாகிறது என்றும், அடுத்த தேர்தல் வரும்போது 81,82 வயதாகிவிடும் என்றும், முன்பை போல அதே உற்சாகத்துடன் தொடர்ந்து பணியாற்றுவது இனி சாத்தியமில்லை என்றும் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் ஒப்பந்தம்

கர்நாடகாவில் 2023ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே போட்டி நிலவியது. இதையடுத்து, ஆட்சி காலத்தில் முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையா முதல்-மந்திரியாக இருக்கவும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் டி.கே.சிவக்குமார் முதல்-மந்திரியாக இருக்கவும் காங்கிரஸ் ஒப்பந்தம் மேற்கொண்டது.

ராஜினாமா

இதையடுத்து சித்தராமையா முதல்-மந்திரியாக பொறுப்பேற்ற நிலையில் அவர் 3 ஆண்டுகள் அந்த பதவியை வகித்தார். இதையடுத்து ஒப்பந்தப்படி தனக்கு முதல்-மந்திரி பதவி வழங்கக்கோரி காங்கிரஸ் மேலிடத்தில் டி.கே.சிவக்குமார் கோரிக்கை வைத்தார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் மேலிடம், ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்தியபின் கர்நாடக முதல்-மந்திரி பதவியை சித்தராமையா ராஜினாமா செய்தார்.இதனைத் தொடர்ந்து கர்நாடக முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.

முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா

இந்நிலையில் வர இருக்கும் 2028 கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார். சித்தராமையா முதலில் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் ஜனதாதளம்(எஸ் ) கட்சியில் செயல்பட்டு வந்தார். துணை முதல்-மந்திரியாகவும் பொறுப்பு வகித்தார். அதன்பிறகு கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2013 முதல் 2018ம் ஆண்டு வரை காங்கிரசில் முதல்-மந்திரியாக சித்தராமையா செயல்பட்டார். அதன்பிறகு 2023-2026 வரை மீண்டும் முதல்-மந்திரியாக இருந்தார்.

தேர்தலில் போட்டி இல்லை

தேர்தலில் போட்டியிடபோவதில்லை என்பது தொடர்பாக சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

இன்றைய அரசியல் களம் சீர்கெட்டுவிட்டது. இதனால் 2028ம் ஆண்டு நடைபெறும் கர்நாடகா சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடப்போவது இல்லை. ஆனாலும் அரசியலில் தொடர்ந்து செயல்பட்டு மக்களின் குரலாக திகழ்வேன். வருணா தொகுதி (சித்தராமையா எம்எல்ஏவாக உள்ள தொகுதி) மக்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடுமாறு என்னை வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், இனி எந்தத் தேர்தலிலும் போட்டியிடக் கூடாது என்று நான் முடிவு செய்துள்ளேன். கடந்த காலங்களில் நான் தேர்தலில் போட்டியிட்டபோது, தொகுதி மக்களே எங்களுக்கு பணத்தை வழங்கி வெற்றியை உறுதி செய்தனர். ஆனால் இன்று, அத்தகைய சூழல் இல்லை. எனக்கு இப்போது 79 வயதாகிறது. எங்கள் அரசாங்கத்தின் (கர்நாடகா காங்கிரஸ் அரசு) பதவிக்காலம் இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளது. அதற்குள் எனக்கு 81 அல்லது 82 வயதாகிவிடும்.

82 வயது

எனது உடல்நிலை முன்பு இருந்ததைப் போல வலுவாக இல்லை. இதனால் முன்பிருந்த அதே உற்சாகத்துடன் பணியாற்றுவது இனி சாத்தியமில்லை. 2028ம் ஆண்டில் எனக்கு 82 வயதாகியிருக்கும். அது எனது அரசியல் வாழ்க்கையின் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் தருணமாக அமையும். 1978ல் தாலுகா வாரிய உறுப்பினராக எனது அரசியல் பயணத்தைத் தொடங்கினேன்.

மக்களுக்கு பணம்

அரசியலில் வெற்றி தோல்விகளை நான் சந்தித்துள்ளேன். ஆனால், நான் நம்பிய கொள்கைகளுக்கு எதிராக செயல்படாமலும், எனது மனசாட்சிக்கு துரோகம் இழைக்காமலும் இருந்ததில் நான் மனநிறைவு கொள்கிறேன். இன்று தேர்தலில் போட்டியிட்டால் மக்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனால் அரசியல் இன்று முற்றிலும் சீர்கெட்டுவிட்டது.

50 ஆண்டுகளாக

நேர்மையான அரசியலுக்கு இடமில்லாத நிலை உள்ளது. இதனால் இனி வரும் தேர்தல்களில் போட்டியிட வேண்டாம் என்ற முடிவுக்கு நான் வந்துள்ளேன். கடந்த 50 ஆண்டுகளாக மாநில மக்கள் என்னை அவர்களில் ஒருவராக கருதி அன்புடன் வழிநடத்தினர். அந்த நன்றிக்கடன் எனக்கு உள்ளது. இதனால் எதிர்கால வாழ்க்கையை பொதுசே்வைக்காக அர்ப்பணிக்க உள்ளேன். (மண்டியா மாவட்டம் கேஆர்பேட்டையில் உள்ள தனியார் நிகழ்ச்சியில் நான் பேசியபோது)

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com